நடுநிசி நிகழ்வுகள்!ஏதோவொரு இலக்கை நோக்கிய
ஆழ்ந்த இரவின் கரங்கள்
வெகுதொலைவில் நீண்டு கொண்டிருக்கிறது...
கண்களுக்குள் அகப்படும் உருவங்கள்
தனக்கான அடையாளங்களை உதறிக்கொண்டு
அமீபாவாய் உருமாற ஆயத்தமானது;
செப்பனிடாத குறுஞ்சாலை நடுவே
தென்பட்ட பள்ளங்களிலெல்லாம்
தேங்கி நின்ற தண்ணீருக்குள்
நிலவும் நீந்திக் கொண்டிருந்தது;
வெயிலின் தாக்கம் அனைத்தையும்
வெகுநேரமாய் உள்வாங்கிக்கொண்டிருந்த
சாலையோர மரங்களனைத்தும்
சற்றுநேரம் உறங்கிக்கொண்டிருந்தன;
பலவருடங்களாய் பூமியில் சேமிக்கப்பட்ட
புதையலின் குவியல்கள் சுரண்டப்பட்டு
வறண்டு கிடந்த ஆற்றின் நடுவே
அடையாளங்களாய் காட்சிக்கு விடப்பட்டிருந்தன;
உறக்கம் தொலைத்த ஒவ்வொரு இரவுக்குள்ளும்
நாய்களின் கூச்சலுக்கிடையே குறட்டை சத்தங்களும்
நிசப்த நாழிகையின் உயிர்நாடியை
நிறுத்த முயல்கின்றன;
இப்படி ஏதோவொரு நிகழ்வுகள்
நடுநிசி பொழுதுகளில் பயணிக்கும்
எல்லா நாட்களிலும்
கடந்து மறைகின்றன நாளைய விடியலோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் அதீதம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

எல்லா நாட்களிலும் கடந்து மறையும் நாளைய விடியல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment