சற்றே சுயமாய் சுதாரித்துக்கொண்டு தன்னை சூழ்ந்துகிடக்கும் சுகவீனமற்ற நிலையை துடைத்தழிக்க முற்படும் அந்தவொரு நொடிப்பொழுதில் ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு மரண ஒத்திகைக்கு ஆயத்தமானது மனது!
பாராளுமன்ற தேர்தலென்றால் தாராளமாய் பணம் கிடைக்கும்... இடைத்தேர்தல் வந்தாலும் இது போலவே கிடைத்திருக்கும்... பணம் மட்டும் தந்தால் போதும் எமனுக்கும் வாக்களிப்போம் இறைவனையே தோற்கடிப்போம்...!
எங்களின் பலம்கொண்ட பசிமறந்த உழைப்புக்கு பலனேதும் கிடைத்ததில்லை... பல போராட்ட குழுவிருந்தும் பசிபோக்க யாருமில்லை... பணம் தந்தால் ஓட்டுண்டு தேர்தலென்று வந்துவிட்டால் கடவுளுக்கே வேட்டுண்டு!
சோறள்ளி உண்பதற்கும் சேறள்ளி உழைப்பதற்கும் உண்டான கையென்றாலும் தேர்தலுக்கு தேடி வந்து ஒற்றை விரலில் மைபூசி வாக்களிக்க பலநூறு பணமளிக்கும் கூட்டமிங்கே கூடிடுச்சு!
எவன் வென்றால் நமக்கென்ன எதிர்கொள்ள தேவையென்ன? பணம் வந்தால் போதுமென்று பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம் வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இரு பாதங்கள் படிய நான் கடந்து போகின்ற சாலைகளின் பாதையெங்கும் என் கண்ணெதிரே தென்பட்ட உருவமெல்லாம் பிரதிபலிக்கிறது உன் முகத்தை! இதுநாள் வரை உன்னைநான் பார்க்கவே இல்லையே... இருந்தபோதிலும் காண்கின்ற எல்லாமும் கவித்துவமாய் என் கண்களுக்கு காட்சி தருகின்றனவே கவிதைதான் உன்முகமோ? மூன்றைந்து நாட்களுக்குள் முகம் மறைக்கும் நிலவைப்போல் என்னுலகில் தோன்றவேண்டிய எனக்கான வளர்பிறையே எப்போது முகம் மலர்வாய்? உன் நிழலைக் கூட காணமுடியாமல் உன் முகத்தை அனுதினமும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்... எனக்கு பிடித்த ஒன்றைப்போல் உனக்கானதொரு புத்தம்புது உருவத்திற்குள் என்னுயிரை பகிர்ந்தளித்து! - இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.