கதை பேசும் காதல்!





-01-

உன் தோள் மீது என் கை வைத்து,
உன் காதோரம் என் தலை சாய்த்து,
பெருங்கதை பேசும் நேரங்களில்
சொர்க்கம் எதுவென உணர்கிறேன்;
அந்த கடவுளை அருகில் காண்கிறேன்
நீ பிரம்மனின் மகளோ?!

-02-

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நல்லிரவு கடந்து பின்னால்
நட்சத்திரங்களும் தொலைந்து விடுகின்றன,
நம்மை போலவே!

-03-

உன்னை ஊரறிய தாலிக்கட்டி
என் மனைவியாக ஏற்கும் அந்நாளுக்காகவே
நாட்காட்டியின் பக்கங்களனைத்தும்
நான் கிழிக்காமலே
தானாகவே உதிர்கிறது என்னறையில்!

-04-
உன் கழுத்தில்
என் கைகளால் கட்டப்படும்
மூன்று முடிச்சுகளுக்காக
இன்ப அவஸ்தையோடு காத்திருக்கின்றன,
நாட்காட்டியில் சுபமுகூர்த்த நாட்களெல்லாம்!

-05-

சங்ககால இலக்கியங்கள் தொடங்கி
சமகால ஹைக்கூக்கள் வரையிலும்
தொன்றுதொட்டு இன்றுவரை
உயிர்ப்போடு இருக்கும் ஒரே மொழி
தமிழ் மட்டுமல்ல; காதலும் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக