முதல்வர்!

அன்னார்ந்து ஹெலிகாப்டருக்கும்
சட்டென குனிந்து காரின் டயருக்கும்
வணங்கிய கைகளிரண்டும்
ஒரேயடியாய் ஓய்ந்து கிடக்க;
பதவி மட்டும் என் பெயராக பிரதிபலிக்க
இனி வேடம் தரிக்கின்றேன்!
சின்னஞ்சிறு சிரிப்பையும்
ஊதி பெரிதாக்கி
”உற்சாகமான ஓ.பி.எஸ்.!”யென
ஊடகங்கள் ஊர்முழுக்க
சொல்லிவிடுமென்பதால்
பொதுவெளியில்
புன்னகைக்கு ஓய்வளிக்கின்றேன்!
மழிக்கப்படாத நரைத்த தாடியில்
அரசியல் ஏதுமில்லை;
ஆளுமைமிக்க பதவியிலும்
சுயமாய் ஆட்சி செலுத்த முடியாமல்
சுவரில் தொங்கவிடப்படுவதாய்
ஓர் உணர்வு!
என்னருகில் மக்களின் முதல்வரான
அம்மாவின் படம் இருக்கின்றது
இது பிரம்மையல்ல
இப்போதாவது நம்புங்கள்
உண்மையாகவே
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான்!
- இரா.ச.இமலாதித்தன்
நான் கடவுள்!
உடலுயிர்
இதிலெது நீயென
கேள்விகள் ஆயிரம்;
இதுதான் நானென
பதில்களில் ஆணவம்...
கடந்து வந்த பாதையெங்கும்
நிரம்பிய நினைவுகளில்
பிரமிக்க வேறேதுமில்லை;
காலமெல்லாம்
சரி தவறென்ற வாதங்களிலும்
சான்றுகளுக்கான தேடல்களிலும்
தொலைந்து போகிறது மனம்...
இலக்கில்லா வாழ்க்கையில்
வரையறுக்கப்பட்ட மரணமும்
அதன் பின்னாலான சரணமும்
உன்னையே பிரதிபலிக்க;
நீயும் நானும் வேறில்லையென
உணர வைக்கிறாய் திரு முருகா!
இதிலெது நீயென
கேள்விகள் ஆயிரம்;
இதுதான் நானென
பதில்களில் ஆணவம்...
கடந்து வந்த பாதையெங்கும்
நிரம்பிய நினைவுகளில்
பிரமிக்க வேறேதுமில்லை;
காலமெல்லாம்
சரி தவறென்ற வாதங்களிலும்
சான்றுகளுக்கான தேடல்களிலும்
தொலைந்து போகிறது மனம்...
இலக்கில்லா வாழ்க்கையில்
வரையறுக்கப்பட்ட மரணமும்
அதன் பின்னாலான சரணமும்
உன்னையே பிரதிபலிக்க;
நீயும் நானும் வேறில்லையென
உணர வைக்கிறாய் திரு முருகா!
- இரா.ச.இமலாதித்தன்
பார்ப்பான்!
அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?
- இரா.ச.இமலாதித்தன்
செப்டம்பர் 11 - மறக்க முடியுமா? ’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!
சாட்டையில்லா பம்பரம்!
அவன் வீட்டில்
அவனை தவிர வேறாரையும்
எனக்கு தெரியாது;
ஆறுமாதம் முன்பு
அவனது தந்தையின் இறப்புக்காக
ஒருநாள் இரவு முழுவதும்
மார்கழி பனிக்கால
வெட்டவெளியில்
அவனோடு கூடவே இருந்து
மறுநாள் சுடுகாடு வரை
பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தேன்...
இன்று
அவனே இறந்துவிட்டான்;
ஒரு மணிநேரத்திற்கு மேலாக
அவன் உடலுக்கு அருகேவும்
அவன் வீட்டிற்க்கு அருகேவும்
நான் இல்லை...
நான் அங்கே இல்லையென்பதற்காக
அவன் என்னை
தவறாக நினைக்க முடியாது;
நாளை என்னிடம்
கோபமும் கொள்ள முடியாது...
ஏனெனில் அவன் இறந்துவிட்டான்;
இறந்தது அவன் மட்டுமல்ல
அவனுடனான ஒராண்டு நட்பும் தான்!
- இரா.ச.இமலாதித்தன்
குழப்பம்!
எதையோ இழந்ததை போல்
ஒரு மாயை;
பெரும்சுமையை சுமக்கிறது
சின்னஞ்சிறு மனது;
அழுததுபோல் சிவந்திருந்த
கண்களுக்குள் ஈரமேதுமில்லை;
உணரமுடியா கவலை
வியாபித்திருக்கும் வேளையில்
உடலெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
ஏதோவொரு தீரா யோசனை;
இழப்பென்பது இயல்பென்றாலும்
இன்னமும்
குழப்பம் மட்டுமே
மிச்சமிருக்கிறது பதிலாக!
- இரா.ச.இமலாதித்தன்
இலக்கியவாதி!
இணையங்கள் போர் தொடுத்ததால்
இலக்கியங்கள் தோற்கடிக்கப்பட்டன
தினமொரு எழுத்தாளன்
புத்தம்புதியதாய் உருவெடுத்தான்;
எனக்கென்ன என்பதுபோல்
விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தான்;
புளங்காகிதம் அடைந்தவனாய்
அனைத்தையும் விவரித்து கொண்டிருந்தான்;
புரியாத விசயங்களையெல்லாம்
தீர ஆய்வறிந்து கிறுக்கலானான்;
நவீனத்து இலக்கிய உலகம்
இவனாலாயே புனரமைக்கப்பட்டது;
இனி இவன் எழுதுவதுதான்
இலக்கியமென நிர்ணயிக்கப்பட்டது!
- இரா.ச.இமலாதித்தன்
கனவெல்லாம் நீ!
நீ கழுத்தை சாய்த்துதான்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!
- இரா.ச.இமலாதித்தன்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)