என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக