விழிகளின் பயணம்!



விழிகளை வானம் ஏமாற்றிக்கொண்டிருக்க
நீலத்தை நோக்கி பயணிக்க தொடங்கின பார்வைகள்;
வரையறுக்கப்படாத இலக்கின் தூரம்
மெல்லமெல்ல நீண்டுக்கொண்டே
வண்ணங்கள் ஏதுமில்லா காட்சிப்பிழையாய்
சிதறிக்கிடந்த நீலமெல்லாம் நீர்த்துக் கொண்டிருந்தன;
பார்வைகள் விசாலமாய் பரந்து விரிய
பழைய படிப்பினைகளெல்லாம் படிக்கட்டுகளாய்
புதிய பரிமாணத்தோடு வெளியெங்கும் பரிணமித்திருந்தன;
கனவுகளை காட்சிகளாய் வடிகட்டி
கணக்கிட தெரிந்த விழிகளும்
வெகுநேரமாய் இலக்கை துலாவிக் கொண்டிருந்தன;
தேடலே வாழ்வியல் ரகசியமென்பதை 

இன்னமும் அது புரிந்து கொள்ளவில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

யாரோவொன்றின் வாழ்த்துகள்!





மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகிவிடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக்கொண்டிருந்தது.
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்கு கைமாறாய்
தையில் கொண்டாடப்படும்  வழிபாட்டு திருவிழாவில்;
நிலவில் குடிபுகுந்தாலும் நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிராய் இருக்க 

முயற்சிக்க வாழ்த்துகளை சொல்லிவிட்டு சென்றது
கடவுளும் மனிதனுமில்லா ஏதோவொன்று!

- இரா.ச.இமலாதித்தன்

இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

தேர்தல் தீபாவளி!



இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது;
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது;
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றது;
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை கூட
வாங்கமுடியாததை உணராமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலக பொருளாதரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்துகொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக்கொண்டிருக்கிறது;
இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய் தமிழன் வக்கற்று போனதால்
இந்த வருட திருவிழா காலமும்
சென்ற சில வருடங்களை போலவே
இருளிலேயே தனித்து கிடக்கிறது
வெறுமையோடு இருமாதங்களாக!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல் வல்லமை இணைய மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

அரசியல் வியாதி!



பொது கழிவறை சுவற்றில்
கிறுக்கிய வார்த்தைகளால்
ஒவ்வொரு இரவுகளிலும்
போதையில் யாராரையோ
தூற்றிக்கொண்டிருந்தான்;
யோக்கியனென அடையாளப்படுத்த
மிகவும் மெனக்கெட்டு
தேர்ந்தெடுத்து கொண்டிருந்தான்
தன்னுடைகளோடு தலைவனையும்;
அரசியல் சாக்கடையில்
வெண்ணிற சட்டையோடு
கட்சிக்கரை வேட்டியோடும்
தூர்வார இறங்கிவந்தான்
தன்மீது கறைபடியாமல்;
திராவிடன் என்ற போர்வையில்
தலைமையின் ஊழலை
தானும் கற்றுக்கொண்டு
உடன்பிறப்பாக்கி கொண்டான்
அரசியலை முழுநேர தொழிலாக!

- இரா.ச.இமலாதித்தன்

அழகிய வான் மேகம்!



வானில் ஓர் அழகிய ஓவியம்
மேகத்தூரிகையால் தீட்டப்பட்டு
ஒருசில நொடிகளுக்குள்ளேயே
அது களையவும் ஆயத்தமாகிறது;
கிழக்கின் கீழிருந்து முளைத்த
ஆதித்த ஒளிகற்றையும் மேல் செல்ல
வான்மரத்தின் உச்சியடைந்த நாழிகையில்
மேற்கு நோக்கி பயணப்பட எத்தனித்து
நாளைய வெளிச்சத்தின் அறுவடைக்காக
அது விதையாய் விழுந்துகொண்டிருந்தது;
வெண்மஞ்சள் வண்ணங்களில் இருள்சூழ
இமைகள் போர்த்திய விழிகள்போல
இரவும் மெதுவாய் உலகில் எட்டிப்பார்த்தது;
தங்களுக்குள்ளேயே யார் அழகென்று
நட்சத்திரங்கள் யுத்தமிட்டுகொண்டிருக்க
நிலவு வந்தவுடன் இமைகள் திறந்த விழிகளாய்
வான்வெளியில் வெளிச்சம் படர்ந்ததும்
ஒருவழியாய் அழகுயாரென்ற போட்டியில்
வழமைபோல நிலவே வாகை சூட
நிசப்பதமான நீண்டதொரு பொழுதில்
நட்சத்திரங்களோடு நிலவும்
அழகாய் உறங்க தொடங்கியது

அவளைப்போலவே!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் கொஞ்சம்!



--001--

நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின்
அன்றைய தருணங்களெல்லாம்
நான்கே நொடிகளில்
கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும்
இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள்
ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது
அருகில் அவளில்லை!

--002--

ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும்
ஏதோவொரு இருக்கைக்கருகில்
எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள்
சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு
உருமாறி இடம்பெயர்ந்திருந்தது
என்பெயரோடு உன்பெயராய்!
 

--003--

கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன்
வருங்கால மனைவி யாரென்று;
பதில் வந்தது நட்சத்திரங்களாய்...
வியந்துபோனேன்;
என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

கலாய்த்தல் திணை!



--001--

நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்!

--002--

நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே!

--003--

தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது!

--004--

அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு!

--005--

நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்!

- இரா.ச.இமலாதித்தன்



இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!

காதல் தேவதை!



-001-

பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!

-002-

மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
 

-003-

காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!

-004-

நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்