உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீயுமென் இறைவனே!



என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே
எனக்கான வலிகளை
உனக்குள்ளேயே மறைத்து கொண்டிருந்தாய்;
கல்லூரி கடந்த காலக்கட்டத்திலும்
உன் மீதான பயத்தை மட்டுமே
எனக்குள்ளாக திணித்து கொண்டிருந்தேன்;
ஊருராய் வேலைத்தேடி
நாய்போல அலைந்தபோது
எனக்காக நீதானே துயரப்பட்டாய்;
நீயடைந்த கஷ்டங்களை
துளியளவு உணரும் வேளை
வாழ்க்கையென்ற மைதானத்தில்
நானுமொரு தகப்பனாகிவிட்டேன்;
உன் ஒருதுளி விந்தால் உருவாக்கப்பட்ட
இந்த உடலுக்கு நீயுமென் இறைவனென்பதை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்
வெறும் தந்தை மட்டுமே நீயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

எனக்கொன்றும் தெரியாது!



திருவிழாக்கால நெரிசல்களில்
நான் தரிசிக்க முடியாத நம் குலசாமியை
நீ தவழ்ந்து நடந்த
பால்ய வயது பருவக்காலங்களில்
என் தோள்மீது உன்னை சுமந்து
உன் கண்கள் வழியாக
வழிபட்ட போதும்

எனக்கொன்றும் தெரியாது!

பள்ளி சென்று திரும்பாத
மாலைப்பொழுதுகளில்
படபடப்போடு
உன்னை வாரியணைத்து
உனக்கான வீட்டுப்பாடங்களை
நான் முடித்து கொடுத்து
உன் அச்சத்தையும்
கண்ணீர் துளிகளையும்
துடைத்தெறிந்த போதும்

எனக்கொன்றும் தெரியாது!

உன் கல்லூரிக்கால கட்டணங்களை
அக்கம்பக்கம் அலைந்துதேய்ந்து
வட்டிக்கு கடன்பட்டு
கடைசி நாளில்
கல்லூரி அலுவலர்களின்
வசைச்சொல்லை வாங்கிக்கொண்டு
உனக்கான பணத்தை செலுத்தியபோது
முகத்தை மட்டும் சிரிக்க
பழகிக்கொண்ட போதும்
எனக்கொன்றும் தெரியாது!

வருடங்கள் கடந்த பின்னே
நீயே பின்பொரு நாள்
இதை என்னிடமே சொல்லிவிட்டு
ஏளனம் செய்வாய் என்பதை பற்றி
இப்போதுதான் உணர்கிறேன்
எனக்கொன்றும் தெரியாது!

- இரா.ச.இமலாதித்தன்

வீட்டில் விருந்தாளி!


நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் 
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!

 - இரா.ச.இமலாதித்தன்

திருவிழா குழந்தை!


திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை 
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து 
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!

- இரா.ச.இமலாதித்தன்

அம்மா!



ஒருகாலத்தில் ஒற்றை வார்த்தையே
உச்சரித்து சொல்ல தடுமாறி
உளறிய என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து வெளியே
தாறுமாறாய் வெடித்து சிதறும்
வார்த்தைகளால் யாவும்
உன்மனதை
சுக்குநூறாய் உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட உதிர்க்காமல்
ஊமையாகவே இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான மரண தண்டனை தான்!

நான் கோபப்பட்டு
கடுஞ் சொற்களை தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம் எடுத்து வீசியும் கூட
என்மீது மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே!

உன் துக்கம் பலவற்றில்
நான் பங்குகொள்ளவில்லை
நீ கதறி அழுத பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லை
அப்பறம் நீ மட்டுமெப்படி
என் சிறு துளி கண்ணீருக்கும்
படபடத்து ஒப்பாரி வைக்கிறாய்?

நான்  வெற்றிபெற்ற வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாக சொன்னாய்;
நான் தோல்வியுற்ற வேளைகளில்
வேறு யாரைவது தேடிபிடித்து
அவர்கள் மீதல்லவா
நீ பழிபோடுகிறாய்!

உன்னை சிரிக்க வைக்க
எந்தொரு சிறு முயற்சி கூட
நான் எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு  வருகிறது?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
'உடம்பு ஏறிவிட்ட'தென்று
வினவியதை கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
'இப்படி இளைத்துவிட்டாயே?’யென்ற
உன் வாய்மொழி கேட்ட பின்னே
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல் தேய்பிறை போல்
தோன்றுவதன் அர்த்தமென்ன?

'நீ சாப்பிட்டாயா ?’
என்று கேட்குமுன்னே
'சீக்கிரம் வந்து சாப்பிட’ சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு பசியென்ற ஒன்றை
இறைவன் கொடுக்கவேயில்லையா?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும் மறைந்துவிடுகிறது
உன் மனதும் நிறைந்துவிடுகிறது
இந்த உண்மை  எந்தொரு அறிவியலிலும்
இதுவரையிலும் நிரூபிக்கப்பட வில்லையே!

உன் பாசம் என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி போய்விட்டதென்ற
உண்மையை உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன் தாயே!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் யூத்புல் விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.