நீயும் நானும்!




















-01-

பார்வைகளாலேயே
என்னுயிர் நீ மீட்கிறாய்;
உன் கண்களுக்குள் தான்
விருட்சமாய் விரிந்திருக்கும்
என் ஆன்மாவின் விழுதுகள்
படர்ந்து கிடக்கின்றன போல!

-02-

தனிமையில் சிரிக்கிறேன்,
உன் நினைவுகளில் தவிக்கிறேன்.
என் எல்லா செயல்களிலும்
நீயே இருக்கிறாய்,
நானே தொலைகிறேன்.
மீட்காதே;
உன்னருகில் வைத்துகொள்!

-03-

உன்னோடு பேசும் 

ஒவ்வொரு நொடியிலும்,
தொலைந்த என்னை நீயே மீட்கிறாய்;
மீண்ட பின்பும்,
மீண்டும் மீண்டும் 

உன்னுள் தொலைகிறேன்; மீட்காதே!

-04-

அப்பறம் என்கிறாய்;
சொல்லு என்கிறேன்.
பதிலுக்கு, நீயே சொல் என்கிறாய்;
நானும் என்ன சொல்வதென தெரியாமல்,
ஏதேதோ சொல்லி முடிக்கிறேன்;
அப்பறம் என்னவென!

-05-

யாருமற்ற பயணத்தில்
நம் உதடுகள் நான்கும் மெளனித்திருக்கும் போது,
உன் இடுப்போடு என் கைகளும்,
என் தோளோடு உன் கைகளும்,
உடலோடு உரையாடி கொள்கின்றன!

- இரா.ச.இமலாதித்தன்

காதலோடு!























-01-

என் கனவுச்சாலையின் அருகில் வந்து
துயில் கொள்கிறாய்;
உன் மனதெங்கும் பரவிக்கிடக்கும்
பேராசை போர்வைகளை துகிலிருத்து,
அமிழ்தம் பகிர்கின்றேன்!

-02-

இந்த காதலை சுற்றியே
இவ்வுலகமும் நிரம்பி வழிகிறது;
நமக்கான காதலும் கூட
உந்தன் காலடி தேடியே
எனக்கான பாதைகளை
விரிவடைய செய்கிறது
நீயே என் வழி!

-03-

என் கோபங்களும்,
உன் கோபங்களும்
தனித்தனியாய் இருக்கும்போது
கோபமாகத்தான் இருக்கின்றன;
நம் இருவருக்குள் வரும் போதுதான்
மரணித்து போய் விடுகின்றன!

-04-

விடிய காத்திருக்கும் இரவில்
உன் கூந்தலுக்குள் குடிபுகுந்து,
உடலை திரியாக்கி தீமுட்டி
அமிழ்தம் கசியும் உன் எச்சில்களால்
அணைக்க அனுமதி தருவாயா?
உன்னை அணைப்பேன்!

-05-

உன்னை என்னிலிருந்து
பிரிக்கமுடியாத ஒற்றை புள்ளியில்
நாமென்ற ஒன்றே
என் நினைவுகளின் வழியே
உச்சமடைவதாய் உணர்கிறேன்.
அங்கும் நான் என்பது நீதான்!

- இரா.ச.இமலாதித்தன்

அவளும் நானும்!





-01-

கூடல்கொண்ட மேகங்களின்
பெருமழைச்சாரல் போல
உடலோடு உறவாடி
என்னுயிரை இதழ்களால் உட்கொள்கிறாய்;
நானென்ற வெற்றுடலோ
உன் கூந்தலில் தலை துவட்டுகிறது!

-02-

என் கைப்பிடிக்குள் மவுஸ் போல
சிக்கிக் கொள்கின்றன உன் நினைவுகள்
மவுஸ் பேடாய் தேய்கிறது மனது!

-03-

கண்கள் வழி சிரிக்கிறாய்;
என்னுயிர் உயிர்த்தெழுகிறது.
தென்றல்மொழி பேசுகிறாய்;
தாழிடப்பட்ட மனக்கதவு திறக்கிறது.
இனி உன்னுள் கலந்து நீயாகிறேன்!

-04-

உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியிலும்,
இதுவரை கண்டுபிடிக்காத
புதுப்புது கிரகங்களையெல்லாம் கடந்து வந்து,
அதற்கெல்லாம் உன் பெயரையே சூட்டுகிறேன்!

-05-

உன் விரல்கள் கோர்த்து,
மழலை மொழி பேசி,
நெரிசலான பாதையில் நடக்க ஆசை.
உன்னை பெற்றெடுத்தவங்களுக்கு மட்டுமல்ல,
எனக்கும் நீ சின்ன குழந்தை தான்!

- இரா.ச.இமலாதித்தன்

சிரிப்பின் சாவி!



வாட்சப் டீப்பியாக
கல்லூரிக்கால நண்பர்களெல்லாம்
தங்களது குழந்தைகளை வைத்திருக்க...இவனோ
ஃபேஸ்புக்கில் குழந்தைப்படம் வைத்திருக்கும்
பெண் பெயரிலுள்ள ஏதொவொரு ஃபேக் ஐடிக்கு
நட்பு விண்ணப்பம் அனுப்பி கொண்டிருக்கின்றான்.
எந்த வருடமென்ற
நினைவிலிள்ளாத நாளொன்றில் எடுக்கப்பட்ட
சிரித்துக்கொண்டிருக்கும் இவனது படமே
இதுநாள் வரை
இவனது டீப்பியாக இருந்து கொண்டிருக்க;
கடைசியாக சிரித்த அப்படியொரு சிரிப்பு
இனி எப்போது வருமென
அவன் உட்பட யாருக்குமிங்கே தெரிய போவதில்லை.
ஒருவேளை
அவனது திருமணத்தின் போது போட்டோகிராஃபருக்காக
இந்த புத்தனும் சிரிக்க வாய்ப்பிருக்கிறது;
அதற்கு பின்னாலும்
இதுபோல தன்னை மறந்து சிரிப்பானா என்பதே
கேள்விக்குறி தான்...
காரணமெல்லாம் பெரிதாய் ஒன்றுமில்லை;
மனைவியாக வரப்போகிற
யாரோவொருத்தியிடம் தானே இருக்க போகிறது
இவனது சிரிப்பின் சாவி!
அழத்தெரிந்த மனைவியிடம்
சிரிப்பது அவ்வளவு எளிதாயென்ன?
இப்போதே சிரித்து விடுயென
பிரபஞ்ச குரலொன்று
இவனுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது;
இப்போது இவன் யோசித்து கொண்டிருக்கிறான்
திருமணம் செய்ய வேண்டுமாயென்று!?

- இரா.ச.இமலாதித்தன்

பிரிவின் வலி!


















001.

எனக்கான வருடத்தில்
365 நாட்கள் வருவதேயில்லை;
உன்னை காணாத நாட்களெல்லாம்
நாட்காட்டியிலிருந்து
கிழிக்கப்படாமலேயே
வெறுமையாய் கடந்து செல்வதால்!

002.

வெறும் ஐம்பது மைல் தொலைவு கூட
இந்த ஒரு நாளில்
அண்டார்டிகா கண்டத்திலுள்ள
தூரம் போல உணர வைக்கிறது
என்னருகில் நீ இங்கில்லை!


 003.


நேற்றை கடந்து விட்டு வந்த
இன்றும் கூட
நாளை கடந்து விடும்;
நேற்றால் இன்றை இழக்கிறேன்,
நாளை என்ன வைத்திருக்கிறாய்?
நான் இழப்பதற்கு!

- இரா.ச.இமலாதித்தன்

காதலும் கடவுளும்!




















001.

தாமரை நீ
அதன் இலை நான்
தண்ணீர் போல நம் நட்பு
விலகுதல் எளிது தான்
ஆனாலும் முடியவில்லை
இறையாய்
மனதினுள் நீ!


002.


நான் என்பதையே
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னால் இழக்கிறேன்
நீ மட்டுமே
என்னுள் இருக்கிறாய்
இப்போது
நீ கடவுளா? காதலா?
குழம்பி நிற்கிறேன்!


003.


ஞானியின் நிலை
எதுவென தெரியாது
ஆனால் நான்
புற வாழ்வியல் எல்லையை
கடந்து விட்டதாய் உணர்கிறேன்
இறைவனிடம் எதை கேட்பதென்றே
தெரியவில்லை
என்னையே கேட்டுவிடவா?


- இரா.ச.இமலாதித்தன்

இணையக்காதல்!












 


பதில் என்னவாக இருக்குமென
வெகு நேரமாய்
வருகைக்காக காத்திருந்து
ஒருவழியாய் ரெண்டு கோடும்
கடல்நீலமாய் மாறிருந்தது...
"டைப்பிங்..."

உள்ளுக்குள் குறுகுறுப்பு...
'குட்நைட்' என பதில் வந்திருந்தது
தூக்கமே இல்லை அன்றிரவு
வாட்சப் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
அவன் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை
இன்று
இணையக்காதல்கள்
இருக்கின்றன
இணைகின்றன
உடனே இல்லாமலும் போகின்றன
காதல் எதுவென தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

புறக்கணிக்கப்பட்டவனோடு கடவுள்!




தாய் தகப்பனை பற்றியெல்லாம்
கவலையில்லை
இனிசியல் இல்லாதவனுக்கு...
எல்லாமும் இழந்த பிறகு
விதியை பற்றியெல்லாம்
பெரியதொரு அக்கறையுமில்லை...
அவன் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு
கனவின் குரல்வளையை நெரிக்கலாம்...
வீதியெங்கும் குப்பைகளுக்குள் கிடக்கும்
பாட்டில்களை பொறுக்கி கொண்டு
மிச்சமிருக்கும் தண்ணீரை
யாரோ பெருமைக்கு நட்டுவிட்டு போன
சாலையோர புறக்கணிக்கப்பட்ட
மரக்கன்றுக்கு இளைப்பாற்றுகிறான்...
அந்தி சாயும் வேளையில்
முனியாண்டி விலாஸ் புரோட்டாகளில்
ஒருவேளை மட்டும்
வயிறாற பசி போக்கி கொள்கிறான்
கூடவே மஞ்சள்நிற நாயுக்கும்
ஜீவகாருண்யம் செய்துவிட்டு
வெகுநாட்களாக தாழிடப்பட்ட கடையின் வாசலில்
கொசுக்களோடு இரவை கழிக்கிறான்...
ஒவ்வொரு நாளும்
இயற்கையை காதலிக்கிறான்...
அவனை யாரும் பொருட்படுத்தவில்லை
அவனும் யாரையும் அலட்சியபடுத்தவில்லை
இது அவனுக்கான மண்
அவனாகவே வாழ்ந்துவிட்டு போகட்டுமேயென
மெளனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்
உலகை படைத்த கடவுள்...
அவன் இயற்கையை இன்னும் காதலிக்கிறான்!


- இரா.ச.இமலாதித்தன்

பராபரனே!



கண்ணீர்த்துளி போன்ற
இராவண தீவுக்குள்
ஓயாத அலைகளாய்
உயிராயுதம் ஏந்தும்
மாவீரர்களை உருவாக்கி
கரும்புலி துணையால்
வரும்பகை அழித்த
பரம்பொருளான பராபரனே;
ஆறுமுகன் போல
ஆறெழுத்தில் வீறுகொண்டு
தமிழினத்தின்
தலையெழுத்தை மாற்றிய
தலைவனவன் பிரபாகரனே!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் தேசிய தலைவா, 60ம் அகவை வாழ்த்துகள்!