புறக்கணிக்கப்பட்டவனோடு கடவுள்!




தாய் தகப்பனை பற்றியெல்லாம்
கவலையில்லை
இனிசியல் இல்லாதவனுக்கு...
எல்லாமும் இழந்த பிறகு
விதியை பற்றியெல்லாம்
பெரியதொரு அக்கறையுமில்லை...
அவன் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு
கனவின் குரல்வளையை நெரிக்கலாம்...
வீதியெங்கும் குப்பைகளுக்குள் கிடக்கும்
பாட்டில்களை பொறுக்கி கொண்டு
மிச்சமிருக்கும் தண்ணீரை
யாரோ பெருமைக்கு நட்டுவிட்டு போன
சாலையோர புறக்கணிக்கப்பட்ட
மரக்கன்றுக்கு இளைப்பாற்றுகிறான்...
அந்தி சாயும் வேளையில்
முனியாண்டி விலாஸ் புரோட்டாகளில்
ஒருவேளை மட்டும்
வயிறாற பசி போக்கி கொள்கிறான்
கூடவே மஞ்சள்நிற நாயுக்கும்
ஜீவகாருண்யம் செய்துவிட்டு
வெகுநாட்களாக தாழிடப்பட்ட கடையின் வாசலில்
கொசுக்களோடு இரவை கழிக்கிறான்...
ஒவ்வொரு நாளும்
இயற்கையை காதலிக்கிறான்...
அவனை யாரும் பொருட்படுத்தவில்லை
அவனும் யாரையும் அலட்சியபடுத்தவில்லை
இது அவனுக்கான மண்
அவனாகவே வாழ்ந்துவிட்டு போகட்டுமேயென
மெளனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்
உலகை படைத்த கடவுள்...
அவன் இயற்கையை இன்னும் காதலிக்கிறான்!


- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக