இணையக்காதல்!












 


பதில் என்னவாக இருக்குமென
வெகு நேரமாய்
வருகைக்காக காத்திருந்து
ஒருவழியாய் ரெண்டு கோடும்
கடல்நீலமாய் மாறிருந்தது...
"டைப்பிங்..."

உள்ளுக்குள் குறுகுறுப்பு...
'குட்நைட்' என பதில் வந்திருந்தது
தூக்கமே இல்லை அன்றிரவு
வாட்சப் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
அவன் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை
இன்று
இணையக்காதல்கள்
இருக்கின்றன
இணைகின்றன
உடனே இல்லாமலும் போகின்றன
காதல் எதுவென தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

புறக்கணிக்கப்பட்டவனோடு கடவுள்!




தாய் தகப்பனை பற்றியெல்லாம்
கவலையில்லை
இனிசியல் இல்லாதவனுக்கு...
எல்லாமும் இழந்த பிறகு
விதியை பற்றியெல்லாம்
பெரியதொரு அக்கறையுமில்லை...
அவன் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு
கனவின் குரல்வளையை நெரிக்கலாம்...
வீதியெங்கும் குப்பைகளுக்குள் கிடக்கும்
பாட்டில்களை பொறுக்கி கொண்டு
மிச்சமிருக்கும் தண்ணீரை
யாரோ பெருமைக்கு நட்டுவிட்டு போன
சாலையோர புறக்கணிக்கப்பட்ட
மரக்கன்றுக்கு இளைப்பாற்றுகிறான்...
அந்தி சாயும் வேளையில்
முனியாண்டி விலாஸ் புரோட்டாகளில்
ஒருவேளை மட்டும்
வயிறாற பசி போக்கி கொள்கிறான்
கூடவே மஞ்சள்நிற நாயுக்கும்
ஜீவகாருண்யம் செய்துவிட்டு
வெகுநாட்களாக தாழிடப்பட்ட கடையின் வாசலில்
கொசுக்களோடு இரவை கழிக்கிறான்...
ஒவ்வொரு நாளும்
இயற்கையை காதலிக்கிறான்...
அவனை யாரும் பொருட்படுத்தவில்லை
அவனும் யாரையும் அலட்சியபடுத்தவில்லை
இது அவனுக்கான மண்
அவனாகவே வாழ்ந்துவிட்டு போகட்டுமேயென
மெளனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்
உலகை படைத்த கடவுள்...
அவன் இயற்கையை இன்னும் காதலிக்கிறான்!


- இரா.ச.இமலாதித்தன்

பராபரனே!



கண்ணீர்த்துளி போன்ற
இராவண தீவுக்குள்
ஓயாத அலைகளாய்
உயிராயுதம் ஏந்தும்
மாவீரர்களை உருவாக்கி
கரும்புலி துணையால்
வரும்பகை அழித்த
பரம்பொருளான பராபரனே;
ஆறுமுகன் போல
ஆறெழுத்தில் வீறுகொண்டு
தமிழினத்தின்
தலையெழுத்தை மாற்றிய
தலைவனவன் பிரபாகரனே!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் தேசிய தலைவா, 60ம் அகவை வாழ்த்துகள்!

‎தமிழ் தேசிய தலைவன்‬!



"பி"ழையில்லா
ப"ர"ம்பொருள் போல
கோட்"பா"டு கொண்ட
போர்க்"க"ளங்களால்
சுதந்தி"ர" தமிழ்நாட்டிற்கான
முருகனானா"ன்"
என் பிரபாகரன்!

- இரா.ச.இமலாதித்தன்

முதல்வர்!



அன்னார்ந்து ஹெலிகாப்டருக்கும்
சட்டென குனிந்து காரின் டயருக்கும்
வணங்கிய கைகளிரண்டும்
ஒரேயடியாய் ஓய்ந்து கிடக்க;
பதவி மட்டும் என் பெயராக பிரதிபலிக்க
இனி வேடம் தரிக்கின்றேன்!

சின்னஞ்சிறு சிரிப்பையும்
ஊதி பெரிதாக்கி
”உற்சாகமான ஓ.பி.எஸ்.!”யென
ஊடகங்கள் ஊர்முழுக்க
சொல்லிவிடுமென்பதால்
பொதுவெளியில்
புன்னகைக்கு ஓய்வளிக்கின்றேன்!

மழிக்கப்படாத நரைத்த தாடியில்
அரசியல் ஏதுமில்லை;
ஆளுமைமிக்க பதவியிலும்
சுயமாய் ஆட்சி செலுத்த முடியாமல்
சுவரில் தொங்கவிடப்படுவதாய்
ஓர் உணர்வு!

என்னருகில் மக்களின் முதல்வரான
அம்மாவின் படம் இருக்கின்றது
இது பிரம்மையல்ல
இப்போதாவது நம்புங்கள்
உண்மையாகவே
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

காதலின் பெயரால்!
















காதல் மனங்கொண்ட
அவளும் நானும்
மணம் கொண்டிருந்தால்
இந்நேரம்
அவனது பெயரின் இரண்டாம் பாதி
ஆதித்தனாகத்தான் இருந்திருக்கும்
இப்போதும்
பெரிய வித்தியாசமொன்றுமில்லை
ஆருத்ரனும் அழகான பெயர் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

நான் கடவுள்!


உடலுயிர்
இதிலெது நீயென
கேள்விகள் ஆயிரம்;
இதுதான் நானென
பதில்களில் ஆணவம்...
கடந்து வந்த பாதையெங்கும்
நிரம்பிய நினைவுகளில்
பிரமிக்க வேறேதுமில்லை;
காலமெல்லாம்
சரி தவறென்ற வாதங்களிலும்
சான்றுகளுக்கான தேடல்களிலும்
தொலைந்து போகிறது மனம்...
இலக்கில்லா வாழ்க்கையில்
வரையறுக்கப்பட்ட மரணமும்
அதன் பின்னாலான சரணமும்
உன்னையே பிரதிபலிக்க;
நீயும் நானும் வேறில்லையென
உணர வைக்கிறாய் திரு முருகா!

- இரா.ச.இமலாதித்தன்

பார்ப்பான்!

























அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?


- இரா.ச.இமலாதித்தன்
செப்டம்பர் 11 - மறக்க முடியுமா? ’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

சாட்டையில்லா பம்பரம்!


 
அவன் வீட்டில்
அவனை தவிர வேறாரையும்
எனக்கு தெரியாது;
ஆறுமாதம் முன்பு
அவனது தந்தையின் இறப்புக்காக
ஒருநாள் இரவு முழுவதும்
மார்கழி பனிக்கால
வெட்டவெளியில்
அவனோடு கூடவே இருந்து
மறுநாள் சுடுகாடு வரை
பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தேன்...
இன்று
அவனே இறந்துவிட்டான்;
ஒரு மணிநேரத்திற்கு மேலாக
அவன் உடலுக்கு அருகேவும்
அவன் வீட்டிற்க்கு அருகேவும்
நான் இல்லை...
நான் அங்கே இல்லையென்பதற்காக
அவன் என்னை
தவறாக நினைக்க முடியாது;
நாளை என்னிடம்
கோபமும் கொள்ள முடியாது...
ஏனெனில் அவன் இறந்துவிட்டான்;
இறந்தது அவன் மட்டுமல்ல
அவனுடனான ஒராண்டு நட்பும் தான்!

- இரா.ச.இமலாதித்தன்