வேலையில்லா காலங்கள்!





குடும்பச்சுமை ஏதுமில்லா
குதூகல கும்மிகளுக்கு நடுவே
வீட்டிற்க்குள் குறுக்கே வந்த
கடன்சுமையை சுமக்க முடியாமல்
தவித்திருந்த என் தந்தையின் தோளுக்கு
துணை சேர்க்கும் கிளையாய்
என் மனதில் ஆழமாய்
ஆலம்விழுதுகள் துளிர்விட ஆரம்பித்தது
வேலைக்கு சென்றிடவேண்டுமென்று!
 
ஊருவிட்டு ஊருவந்து
ஞாயிறு தினசரிகளை பக்கம்பக்கமாய்
கட்டம்கட்டிய விளம்பரங்களை
வேலைத்தேடி தவித்தபோது...
வேலையேதுமில்லாமல்
விளையாட்டாய் சுற்றி திரிந்து
வீணாக பலபொழுதை கழித்து
வீராப்பாய் சட்டை தூக்கி
வீதியெங்கும் அலைந்த
அந்நாட்களில் நான் அறிவேனா
ஒவ்வொரு அலுவலகமாய் படியேறி
இப்படி அலைகழிக்க படுவேனென!
 
எப்படியோ ஒருவழியாய்
போதுமென்ற மனநிறைவோடு
இன்றைய வாழ்க்கை தந்த
இந்தவேலையும் முட்டிமோதி
கிடைத்த போது...
பார்ப்பவன் யாராகினும்
படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சே
வேலைக்கு போகலையா? யென்று
நையாண்டி செய்தாலும்
நாசுக்காய் சிரித்து மழுப்பி
நழுவிச்சென்ற அந்நாட்களில்
நான் அறிவேனா
இவ்வாழ்க்கையும் என்னைவிட்டு
விலகிச்சென்றதை!


- இரா.ச.இமலாதித்தன் 


_

அதுவொரு நிலாக்காலம்!



முத்தம் ஒன்றை வாங்கிடவேண்டி
தவம் கிடக்கும் கன்னம் போலவே
நித்தம் என்னை சுற்றி
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் முழு நிலவும்
முற்ற கடலில் மிதந்து வந்து
உலவுகின்ற அந்திவேளை
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
எதுவாயினும் அதுவொரு நிலாக்காலமே!

- இரா.ச.இமலாதித்தன்

நீயும் காதலும்!

 

01.

உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வீணாய் போகிறதே யென்று
வருத்தத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள்!

----o0o----


02.

காதல் தவறில்லை
என்றுரைத்த
என் நண்பனிடம்
கோபப்பட்டத்தை
தவறென்று உணர்கிறேன்
இன்று
உன்னை கண்டபின்னால்!

----o0o----



03.

காதல் மறுப்பை 
பெருமிதமாய் பேசித்திரியும்
பெரியோர்கள் அறிவார்களா
பிறப்பின் அடித்தளமே
காதலென்று...!

----o0o----



04.

நான் பேருந்து படியினில்
தொற்றிக்கொண்டு
பயணம் செய்து வரும்
காலைநேர சாலையெங்கும்
உன் மீதான காதலும்
என்னோடு தொற்றிக்கொண்டு
பயணிக்கிறது
பேருந்தை விட்டு
நீ கீழறங்கி
சென்ற பின்பும்!

----o0o----



05.

காதல் இல்லையென்று
சுற்றித்திரிந்த
நாட்களையெல்லாம்
காட்சிப் பொருளாய்
நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் காண்பிப்பதற்காய்!

----o0o----



   - இரா.ச.இமலாதித்தன்






இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


_

சொல்லாத காதல்!



வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது 
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!










உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே 

கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய

காதல்...!





- இரா.ச.இமலாதித்தன் 




இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.



_

சினிமா!




காசுக்காக அழுது நடித்து
திரை அரங்கம் உள்வந்து
சில நிமிடம் கையசைத்து
காரில் பறந்தான்
நடிகன்...!
 

 காசு கொடுத்து
அழுதுவிட்டு
திரையரங்கம் வெளிவந்து
நடை பயணமானான்
ரசிகன்...!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வார்த்தை!



ஆழ் மனதில் புதையுண்ட
எண்ணங்களெல்லாம்
வார்த்தைகளாய் உருமாறி
வரிகளாய் வெளிப்பட்டு
கம்பீரமாய் சிரித்தாலும்
தவழ்ந்து வருகின்ற கைக்குழந்தை
எழுந்து நடப்பது போல்
தடுமாறி உதிர்கின்றன
உன்னிடம் வார்த்தைகளாய்!








உன்னிடம்
சொல்லிவிட்டு திரும்பிய
சொற்கள் அனைத்தும்
வென்றுவிட்ட களைப்பில்
கலைந்து கிடக்கின்றன
அர்த்தங்களற்று!


- இரா.ச.இமலாதித்தன்

உழவர் வாழ்வு! (நாட்டுபுற மெட்டு)



(இதுவும் என் முதல் முயற்சி தான்...)


சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா

வம்புதும்பு போனதில்ல வாய்க்காசண்ட ஏதுமில்ல
தண்ணிகேட்டு கத்துறோமே நித்தம்தான்
வயலு தொண்டை போலே வறண்டதென்ன குத்தம் தான்....

ராப்பகலா கண்விழிச்சு வயவரப்புலே கிடந்தாலும்
விடிஞ்சிடாம போனதென்ன வாழக்கைதான் - நல்ல
முடிவுக்காகக் காத்திருக்கோம் வேர்க்கத் தான்....

(சேத்துலதான் காலவச்சு...)

உறக்கம்கெட்டு உழைச்சாலும் பழையசோறு தின்னாலும்
ஊருக்குள்ளே நாங்கயெல்லாம் ஏழைதான்
தெனமும் உருப்படியாக் கூலி வாங்குறதே கஷ்டம்தான்

அன்னந்தண்ணி உண்ணாம அசராம உழைக்குறோமே
ஆக்கிதின்ன அரிசிகொடுத்தா போதுமா
எங்க அடி வவுத்துலே கையை வச்சா நியாயமா

(சேத்துலதான் காலவச்சு...)

விதைநெல்லைக்கூட விலைக்கு வாங்கி விதைக்குறோம் -அந்த
வெள்ளைக்காரன் வித்ததெல்லாம் போலியாம்
அதை விதைச்சு புட்டா மண்ணெல்லாம் மலடியாம்

என்னன்னமோ நடக்குது ஒண்ணுமே புரியலையே
உழைக்கநாங்க காத்திருக்கோம் ஆசையா
கத்திகத்தி கேட்டாலும் கவலைஇங்கே தீரலையே

சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா...

- இரா.ச.இமலாதித்தன்


காதல்ன்னு சொல்லிபுட்டா! (கானா பாட்டு)



(என் முதல் முயற்சி...கானா "மாதிரி"...)


அவள பார்த்த நாள்முதலா நானும் தான் தூங்கலையே...
தூங்கமா படுத்திருந்தா நித்தமும் தான்- என் மனசும் தாங்கலையே
என் கண்ணுக்குள்ள வந்துவந்து கனவாகி போனாளே
கணவனாக வரத்தானே வரம் வாங்கி வந்தேனே...

அவகூட பேசலாம்னு பின்தொடர்ந்து வந்தேனே
என்னை கண்டுகிட்டும் காணாம எப்பவுமே போறாளே
என்னான்னு சொல்லுவேன் அவ கண்ணாலே கொல்லுறா
அவகிட்ட என் மனச வித்துபுட்டேன் மொத்தமா
அவ இல்லாம நான் வாழ என்ன செஞ்சேன் குத்தமா...?

மனசை கடன் கொடுக்க கூட அவளுக்கு மனசும் தான் வரலையே
மல்லுகட்டி நிக்குறேனே மன்றாடி பார்க்குறேனே
என்னை காதல் செய்யவே அவளும் தேடிகூட வரலையே
அதற்கான நாளும் இங்கே கைகூடி வரலையோ...?

காதல்ன்னு சொல்லிபுட்டா கடைசி வரைக்கும் கவலைதான்
அதுவே கனவாகி போனதுன்னா நானும் கூட இல்லைதான்
பொண்ணுகிட்டே ஏமாறி பொழப்பும் தான் ஓடுதே
கண்ணேன்னு சொன்னவளும் அம்போன்னு விட்டுட்டா...

- இரா.ச.இமலாதித்தன்

முட்டாள்!




பொட்டிக்குள் பூட்டிவைத்த
வேட்டி சட்டை பளபளக்க
வெட்டித்தனமாய் மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு உதவாதபயலென்று
ஊர்சொல்ல கேட்ட பின்னும்
தலைவன் வந்த கூட்டத்திற்கு
பெயர்பலகை வைத்திடவே
வட்டிக்கு பணம் வாங்கி
நடுத்தெருவில் தொண்டனொருவன்!

கோட்டைக்குள் குறட்டை விட
கட்சிக்குள்ளே போட்டிப் போட்டு
சீட்டு வாங்க கட்டுக் கட்டாய்
நோட்டை கொட்டிக் கொடுத்து
ஒட்டுக்கேட்க தலைவனொருவன்!

நட்டாற்றில் தள்ளிவிட்டு
நாட்டாமை செய்வதற்கு
காட்டாற்று வெள்ளமென
மூட்டை தூக்கி நாட்கள் கடத்தும்
பாட்டாளி வர்க்கம் நானென்று
நாட்டுக்குள் முழங்கிக்கொண்டே 
 
தேர்தலுக்குள் தலைவனொருவன்!

மோட்சமடைந்த முனிவன்போல
நாட்டை காக்க அவதாரம் எடுத்ததாக
வீட்டிற்குள்ளே விளக்கமும் கொடுத்து...
பட்டினி சாவே இல்லாதொழிக்க போவதாய்
காட்டமாய் ஊடகத்தில் பேசிவிட்டு
நட்சத்திர விடுதியில் தானுண்ண
பட்டியலிட்டான் தலைவனொருவன்!

ஓட்டு போட்டு அரியணை ஏற்றிய
பாட்டாளி மக்களுக்கே
வேட்டு வைக்க துணிந்தவனை போற்றி
போட்டிப்போட்டு வாழ்த்து மடல்
பட்டித்தொட்டி எங்கும் பளபளக்க
கடவுள்போல தலைவனொருவன்!

தட்டிக் கேட்க எவனுமில்லை
எட்டு திசையும் எனக்கிங்கு நிகருமில்லை
கட்டம்கட்டி கணக்காய் காயும் நகர்த்தி
பட்டு வேட்டி சட்டையோடு புறப்பட்டான்
எட்டா புகழுடைய தலைவனொருவன்!

கட்டில் தூக்கமே கனவாய் போக
விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலவே
வட்டிக்கே கடனும் வாங்கி இழுபறியோடு...
தட்டுத் தடுமாறி குடும்பம் நடத்த வழியுமின்றி
பட்ட மரமாய் நடுத்தெருவில் நிற்கிறான்
ஓட்டளித்த முட்டாள் தொண்டனொருவன்!

- இரா.ச.இமலாதித்தன்

_