முட்டாள்!




பொட்டிக்குள் பூட்டிவைத்த
வேட்டி சட்டை பளபளக்க
வெட்டித்தனமாய் மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு உதவாதபயலென்று
ஊர்சொல்ல கேட்ட பின்னும்
தலைவன் வந்த கூட்டத்திற்கு
பெயர்பலகை வைத்திடவே
வட்டிக்கு பணம் வாங்கி
நடுத்தெருவில் தொண்டனொருவன்!

கோட்டைக்குள் குறட்டை விட
கட்சிக்குள்ளே போட்டிப் போட்டு
சீட்டு வாங்க கட்டுக் கட்டாய்
நோட்டை கொட்டிக் கொடுத்து
ஒட்டுக்கேட்க தலைவனொருவன்!

நட்டாற்றில் தள்ளிவிட்டு
நாட்டாமை செய்வதற்கு
காட்டாற்று வெள்ளமென
மூட்டை தூக்கி நாட்கள் கடத்தும்
பாட்டாளி வர்க்கம் நானென்று
நாட்டுக்குள் முழங்கிக்கொண்டே 
 
தேர்தலுக்குள் தலைவனொருவன்!

மோட்சமடைந்த முனிவன்போல
நாட்டை காக்க அவதாரம் எடுத்ததாக
வீட்டிற்குள்ளே விளக்கமும் கொடுத்து...
பட்டினி சாவே இல்லாதொழிக்க போவதாய்
காட்டமாய் ஊடகத்தில் பேசிவிட்டு
நட்சத்திர விடுதியில் தானுண்ண
பட்டியலிட்டான் தலைவனொருவன்!

ஓட்டு போட்டு அரியணை ஏற்றிய
பாட்டாளி மக்களுக்கே
வேட்டு வைக்க துணிந்தவனை போற்றி
போட்டிப்போட்டு வாழ்த்து மடல்
பட்டித்தொட்டி எங்கும் பளபளக்க
கடவுள்போல தலைவனொருவன்!

தட்டிக் கேட்க எவனுமில்லை
எட்டு திசையும் எனக்கிங்கு நிகருமில்லை
கட்டம்கட்டி கணக்காய் காயும் நகர்த்தி
பட்டு வேட்டி சட்டையோடு புறப்பட்டான்
எட்டா புகழுடைய தலைவனொருவன்!

கட்டில் தூக்கமே கனவாய் போக
விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலவே
வட்டிக்கே கடனும் வாங்கி இழுபறியோடு...
தட்டுத் தடுமாறி குடும்பம் நடத்த வழியுமின்றி
பட்ட மரமாய் நடுத்தெருவில் நிற்கிறான்
ஓட்டளித்த முட்டாள் தொண்டனொருவன்!

- இரா.ச.இமலாதித்தன்

_

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக