பார்ப்பான்!

























அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?


- இரா.ச.இமலாதித்தன்
செப்டம்பர் 11 - மறக்க முடியுமா? ’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

சாட்டையில்லா பம்பரம்!


 
அவன் வீட்டில்
அவனை தவிர வேறாரையும்
எனக்கு தெரியாது;
ஆறுமாதம் முன்பு
அவனது தந்தையின் இறப்புக்காக
ஒருநாள் இரவு முழுவதும்
மார்கழி பனிக்கால
வெட்டவெளியில்
அவனோடு கூடவே இருந்து
மறுநாள் சுடுகாடு வரை
பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தேன்...
இன்று
அவனே இறந்துவிட்டான்;
ஒரு மணிநேரத்திற்கு மேலாக
அவன் உடலுக்கு அருகேவும்
அவன் வீட்டிற்க்கு அருகேவும்
நான் இல்லை...
நான் அங்கே இல்லையென்பதற்காக
அவன் என்னை
தவறாக நினைக்க முடியாது;
நாளை என்னிடம்
கோபமும் கொள்ள முடியாது...
ஏனெனில் அவன் இறந்துவிட்டான்;
இறந்தது அவன் மட்டுமல்ல
அவனுடனான ஒராண்டு நட்பும் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

குழப்பம்!


எதையோ இழந்ததை போல்
ஒரு மாயை;
பெரும்சுமையை சுமக்கிறது
சின்னஞ்சிறு மனது;
அழுததுபோல் சிவந்திருந்த
கண்களுக்குள் ஈரமேதுமில்லை;
உணரமுடியா கவலை
வியாபித்திருக்கும் வேளையில்
உடலெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
ஏதோவொரு தீரா யோசனை;
இழப்பென்பது இயல்பென்றாலும்
இன்னமும்
குழப்பம் மட்டுமே
மிச்சமிருக்கிறது பதிலாக!

- இரா.ச.இமலாதித்தன்

அலைபேசி!





















அலைபேசியில் சேமிக்கப்படாத
புத்தம்புதிய எண்ணிலிருந்து
அழைப்பு வரும்போதெல்லாம்
அது அவளாக இருக்குமோயென்ற
ஆர்வம் மட்டுமே
ஒவ்வொரு முறையும்
விடாமல் தொற்றிக்கொள்கிறது;
மிச்சமிருப்பது என்னவோ
வழக்கம்போல
ஏமாற்றமும் ஏக்கமும் தான்!

 - இரா.ச.இமலாதித்தன்

இலக்கியவாதி!



இணையங்கள் போர் தொடுத்ததால்
இலக்கியங்கள் தோற்கடிக்கப்பட்டன
தினமொரு எழுத்தாளன்
புத்தம்புதியதாய் உருவெடுத்தான்;
எனக்கென்ன என்பதுபோல்
விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தான்;
புளங்காகிதம் அடைந்தவனாய்
அனைத்தையும் விவரித்து கொண்டிருந்தான்;
புரியாத விசயங்களையெல்லாம்
தீர ஆய்வறிந்து கிறுக்கலானான்;
நவீனத்து இலக்கிய உலகம்
இவனாலாயே புனரமைக்கப்பட்டது;
இனி இவன் எழுதுவதுதான்
இலக்கியமென நிர்ணயிக்கப்பட்டது!

- இரா.ச.இமலாதித்தன்

கனவெல்லாம் நீ!



நீ கழுத்தை சாய்த்துதான்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!

- இரா.ச.இமலாதித்தன்

விலகும் இறுக்கம்!


இறுகி கொண்டிருக்கிறது நூல்
விலகி கொள்ளாத ஆரம்
இறுதி பிடியை எதிர்பார்த்து
சின்னஞ்சிறு வட்டமிடுகிறது;
சுற்று மட்டுமே நீள்கிறது
தளர்வில் இளகிக்கொள்ள
சுயமாகவே ஆயத்தமாகிறது;
முடிவில் அறுத்தெறிய படலாம்
இலகுவாக விலகுவது
எப்போதும் இயல்பு தானே!

- இரா.ச.இமலாதித்தன்

துரோக கூட்டம்!


சூழ்ச்சியின் வலைகள்
பின்னப்பட்டு கொண்டிருக்கின்றன
சில சிலந்திகளின் முயற்சியால்...
சிங்கம் கால் இடறி விழுவதை 
ரசிக்க காத்திருக்கிறது
பூனைகள் கூட்டம்...
நரிகளை நம்பி ஏமாறுவதை விட
நான் நானாகவே இருந்து விடலாமென
நற்சிந்தனை தானாக எழுகிறது;
பதுங்கி கிடக்கும்  பன்றிகளெல்லாம்
ஒன்றாய் இணைகிறது;
அப்போதும்
சிங்கம் தனித்தே காத்திருக்கிறது
துரோகத்தை சின்னா பின்னமாக்கி
தன் சுயத்தை வெளிக்காட்ட!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுக்கான ஏமாளி!


இனி புத்தம்புதிதாய்
அவள் பிறக்க போவதில்லை
எங்கிருக்கிறாளோ?
என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?
தனிமையில் தவித்து கொண்டிருக்கிறாளோ?
படித்து கொண்டிருக்கிறோளோ?
பணி செய்து கொண்டிருக்கிறாளோ?
இல்லை வழமைபோல;
கணவனாக வரப்போகும் அவன்
இவளது கண்ணசைவுகளுக்கே
கட்டுப்பட வேண்டுமென்று
எந்த கோவில்களிலாவது
நெய்தீபம் ஏற்றி கொண்டிருக்கிறாளோ...
எது எப்படியோ
ஓர் ஏமாளி காத்து கொண்டிருக்கிறான்
முகநூலில் கிறுக்கிய படியே!

- இரா.ச.இமலாதித்தன்