
--001--
நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்!
--002--
நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே!
--003--
தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது!
--004--
அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு!
--005--
நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்!
- இரா.ச.இமலாதித்தன்
இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!

-001-
பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!
-002-
மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
-003-
காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!
-004-
நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!
- இரா.ச.இமலாதித்தன்

ஏதோவொரு இலக்கை நோக்கிய
ஆழ்ந்த இரவின் கரங்கள்
வெகுதொலைவில் நீண்டு கொண்டிருக்கிறது...
கண்களுக்குள் அகப்படும் உருவங்கள்
தனக்கான அடையாளங்களை உதறிக்கொண்டு
அமீபாவாய் உருமாற ஆயத்தமானது;
செப்பனிடாத குறுஞ்சாலை நடுவே
தென்பட்ட பள்ளங்களிலெல்லாம்
தேங்கி நின்ற தண்ணீருக்குள்
நிலவும் நீந்திக் கொண்டிருந்தது;
வெயிலின் தாக்கம் அனைத்தையும்
வெகுநேரமாய் உள்வாங்கிக்கொண்டிருந்த
சாலையோர மரங்களனைத்தும்
சற்றுநேரம் உறங்கிக்கொண்டிருந்தன;
பலவருடங்களாய் பூமியில் சேமிக்கப்பட்ட
புதையலின் குவியல்கள் சுரண்டப்பட்டு
வறண்டு கிடந்த ஆற்றின் நடுவே
அடையாளங்களாய் காட்சிக்கு விடப்பட்டிருந்தன;
உறக்கம் தொலைத்த ஒவ்வொரு இரவுக்குள்ளும்
நாய்களின் கூச்சலுக்கிடையே குறட்டை சத்தங்களும்
நிசப்த நாழிகையின் உயிர்நாடியை
நிறுத்த முயல்கின்றன;
இப்படி ஏதோவொரு நிகழ்வுகள்
நடுநிசி பொழுதுகளில் பயணிக்கும்
எல்லா நாட்களிலும்
கடந்து மறைகின்றன நாளைய விடியலோடு!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் அதீதம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

உன்னைவிட்டு பிரியப்போவதாய்
உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று சிலிர்த்துக்கொண்டு
மறுமொழி ஏதும் சொல்லாமல்
மௌனத்தை மட்டுமே
முழுவதுமாய் பரவச்செய்து
புன்னகையை தவழ விட்டதும்
குழம்பி நிற்கிறது உடல்;
பிரிதலை ஏன் சொன்னோமென்று
உடனடியாய் தன்னிலை மாறுதலாக்கி
மௌனத்திலேயே லயித்திருக்க முடிவுசெய்து
தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி
சூழ்ந்த அமைதியை கலைக்காமல்
ஆழ்ந்து நீடித்திருந்தது உயிர்;
கடைசிநேர பரிவர்த்தனையாய்
ஏதேதோ செய்யலாமென முயன்றும்
தோல்வியடையப்போவதை
உணர்ந்திருந்த உடலும்
இத்தனை நாட்களாய்
உடன்பிறப்பாய் உள்ளிருந்த
உறவின் தவக்காலம் முடிந்து
பயணப்பட ஆயத்தாமாயிருந்த
அழிவில்லா ஆன்மாவை
வழியனுப்பி வைத்தது
முடிவில்லா மரணத்தால்!
- இரா.ச.இமலாதித்தன்

சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!
- இரா.ச.இமலாதித்தன்

செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!
- இரா.ச.இமலாதித்தன்

பொன்னிற மாலையில்
மண்ணுக்குள் மூழ்க
ஆயத்தமானது ஆதித்தன்;
வெகுநேரமாய்
நகர்ந்துக் கொண்டிருக்கும்
இந்த பாதையின் சுவடுகள்
நெடுந்தூரம் நீண்டிருக்கவில்லை;
வழி தெரியாமலே
கால்கள் இரண்டும்
ஒன்றோடொன்று முந்திக்கொண்டிருந்தன;
எந்தவொரு துருவமும்
அனுமானிக்கப்படாத வேளையில்
பேரிடருக்குள் அகப்பட்டிருப்பதாய்
அவதானித்திருந்தன விழிகள்;
பேரிருள் சூழ்ந்த
கார்மேக வானை நோக்கி
நிலவை தேடி
தோல்வியடையும் தருவாயில்
மாத வான் விடுமுறையை
நினைவு கூர்ந்து கொண்டிருந்தது மூளை;
வெகுநேர சுழற்சியின்
பயண களைப்பில்
சோர்வோடு திளைத்திருந்தது உடல்;
நீண்ட நேரம் நிகழ்வுகளுக்கிடையில்
காதோரம் ரீங்கரமிட்டது அழைப்பொலி;
இமைகள் திறக்கும்போது
வெயிலின் வெளிச்சம்
விழிகளுக்குள் ஊடுருவ
மணி ஏழாகி இருந்தது;.
மீண்டுமந்த வழமையான
அலுவல்கள் தொடர
எழுந்து கொண்டிருக்கிறேன்
கனவிலிருந்து!
- இரா.ச.இமலாதித்தன்

மதத்தின் குரு
சாத்வீக மனது
சாமனிய தவம்
ஏமாற்ற வலி
வள்ளுவ சிலை
காதலின் தோல்வி
நிகழ்கால ரௌத்ரம்
வறுமையின் உருவம்
கவிஞனின் அடையாளமென
அலங்கரிக்கப்படுகிறது
முகத்தில் தாடியாய்!
- இரா.ச.இமலாதித்தன்

-001-
நமக்குள்ளான கூடலை பற்றி
கிறுக்க தொடங்கும்போது
எழுத்துகள் ஊடல் கொள்வதால்
பற்றில்லாமல் நிற்கிறது
தமிழ் மீதான காதல்!
-002-
நான் அவள்
மூன்றாவதாய்
அது
தனித்து நின்று
எங்கள் இருவரையும்
தனிமை படுத்தியது
தயக்கம்!
-003-
தமிழுக்கும் உனக்கும்
ஒரே ஒற்றுமை;
அறிய முடியவில்லை
சரியான வயதை!
-004-
நட்பு காதல்
எந்த ஒன்றை
பிடிக்குமென்றாய்
பதிலாக உன்னையென்றேன்!
-005-
உன் சிரிப்பு,கோபம்,
அழுகைக்கெல்லாம்
அப்படியே மறுமொழிந்தேன்;
நீ வெட்கப் படுகிறாய்
பதிலாக
வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிகிறது!
-006-
முதல் நிகழ்வு
மீண்டும் நிகழ்வதில்லை
மீண்ட காதலில்!
- இரா.ச.இமலாதித்தன்