காதல் சேமிப்பு!


தோல்வியின் புன்னகை
வெற்றியின் கண்ணீர்
நண்பனின் உந்துதல்
எதிரியின் போர்க்குணம்
இதுபோல இன்னும் ஏராளமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்கான என் நெஞ்சுக்குள்
பின்னொருநாளில் உன்னிடம் காண்பிக்க!


- இரா.ச.இமலாதித்தன் 

பிச்சை பாத்திரம்!



குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
பிராதன சாலையோரம்
பயணிக்கும் நேரமெல்லாம்
பிச்சைகேட்டு கையேந்தும்
மழலைகளின் கரங்களுக்குள்
உறங்கி கிடக்கிறது
ஆதரவற்ற அனாதையாய்
பொருளாதாரம்!

- இரா.ச.இமலாதித்தன்

தன்னந்தனியாய்!



தனிமைகள் அனைத்தும்
ஒருமித்து நிரம்பிவழியும்
எண்ணிக்கையற்ற நொடிகளுக்குள்...
சின்னஞ்சிறு அறையினுள்ளே
புதைக்கப்பட்டும்,
புதியதாய் உருவெடுக்கும்
ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும்
வட்டமிடுகிறது கோரமுகம்!

- இரா.ச.இமலாதித்தன்

புலித்தமிழா!

மாவீரர் தின வாழ்த்துகள்...!






உயிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று
வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே!
ஓயாத அலைகளாய்
நம்தமிழ் புகழ்விதை தூவி
கரும்புலியாய் களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் - என்
தமிழினம் காத்த கடவுளாய்
உன்னை நான் கண்டிருப்பேன்!

கடற்புலியாய் கடலுக்குள்ளே
கப்பலையே கவிழ்த்துவந்து
கயவனையும் கலங்கடித்தாய்.
மச்சவதாரமே உனக்கென்றும் மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை!
வான் புலியாய் வான்தேடி வட்டமிட்டு
போராளி இயக்கங்களின் பேரொளியாய்
முன்னோடி தமிழனென
வானோடி வலம்வந்து 

வான்புகழை வெளிக் கொணர்ந்தாய்!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே...
குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்...
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்!
பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்!

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுதந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்

திமிர் நிலம்!



ஏக்கத்தோடு வானம் பார்த்து
காத்துக்கிடந்தாலும்
நெஞ்சம் நிமிர்த்தி
திமிராய் அண்ணார்ந்து
பார்த்துக்கொண்டிருக்கிறது
எங்களது நிலமும்
எங்களை போலவே!

- இரா.ச.இமலாதித்தன்

யார் நீ?



வண்ணங்கள் நிரப்பிய பாத்திரத்தில்
தூரிகையை நனைத்தெடுத்து
குரலில் உன் உருவம் வரைந்தேன்...
வண்ணங்களில் என்ன நிறமென்று
வரையறுக்க முடியாத புத்தம்புது வடிவமாய்
என்மன காகிதத்தில் பிரதிபலித்தாய்...
இப்போதாவது சொல் நீ
காட்சிப்பிழையா...? கானல்நீரா...?

- இரா.ச.இமலாதித்தன்

காதல் மந்திரம்!




காந்தர்வம் உன் பெயரில் உள்ளதடி
ராது ஒலிக்கிறதே என்காதில் நித்தமடி
இதைத்தான் இரவில் என் கனவிலும்
உச்சரித்தேன் நானும் உன்மேல் பித்தனடி!

- இரா.ச.இமலாதித்தன்

சுவடுகள்!















பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்! 

 - இரா.ச.இமலாதித்தன்

தன்னம்பிக்கை!




















வறண்டு போன மண்ணுக்குள்ளும்
இறந்து போகும் நாட்கள் எண்ணும்
ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க
வறண்ட நிலத்திற்க்குள்ளும்
வானில் விழிவைத்து
வேரின் வழித் தோண்டி
இதழ்கள் கரம் நீட்டி
புது வாழ்வை எதிர்நோக்கி
இருண்டு போனதொரு 
செடியின் பயணமும்
இனிதே தொடக்கமாகிறது 
தன்னம்பிக்கையுடன்!
                                          
 - இரா.ச.இமலாதித்தன்