யார் நீ?



வண்ணங்கள் நிரப்பிய பாத்திரத்தில்
தூரிகையை நனைத்தெடுத்து
குரலில் உன் உருவம் வரைந்தேன்...
வண்ணங்களில் என்ன நிறமென்று
வரையறுக்க முடியாத புத்தம்புது வடிவமாய்
என்மன காகிதத்தில் பிரதிபலித்தாய்...
இப்போதாவது சொல் நீ
காட்சிப்பிழையா...? கானல்நீரா...?

- இரா.ச.இமலாதித்தன்

காதல் மந்திரம்!




காந்தர்வம் உன் பெயரில் உள்ளதடி
ராது ஒலிக்கிறதே என்காதில் நித்தமடி
இதைத்தான் இரவில் என் கனவிலும்
உச்சரித்தேன் நானும் உன்மேல் பித்தனடி!

- இரா.ச.இமலாதித்தன்

சுவடுகள்!















பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்! 

 - இரா.ச.இமலாதித்தன்

தன்னம்பிக்கை!




















வறண்டு போன மண்ணுக்குள்ளும்
இறந்து போகும் நாட்கள் எண்ணும்
ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க
வறண்ட நிலத்திற்க்குள்ளும்
வானில் விழிவைத்து
வேரின் வழித் தோண்டி
இதழ்கள் கரம் நீட்டி
புது வாழ்வை எதிர்நோக்கி
இருண்டு போனதொரு 
செடியின் பயணமும்
இனிதே தொடக்கமாகிறது 
தன்னம்பிக்கையுடன்!
                                          
 - இரா.ச.இமலாதித்தன் 

வழித்தடங்கள்!













 




தரிசு நிலங்களுக்கிடையில்
அவன் கடந்து செல்கின்ற
பல்வேறு திசையெங்கும் பரவி கிடக்கும்
ஒற்றை வழி பாதைகளின் 
தேய்ந்து போன கால் தடங்களெல்லாம் 
தன் மூதாதையர் விட்டுச்சென்ற வழியென்று
அவனுக்கு தெரிந்திருக்கலாம் - ஆனால்
அவனது காலணிக்குத்தான்
உணரும் பக்குவம் இல்லை
அவர்கள் பட்டுணர்ந்த வலியை...!

- இரா.ச.இமலாதித்தன் 

_

நீயொரு பகுத்தறிவாதியா?













 
கடவுளில்லையென்றாய்
புதிய பாதை இதுதானென்றாய்
பின்னொருநாள் மதம் பிடிக்காதென்றாய்
சாதியத்தை எதிர்த்தாய்
சடங்குகளை குறைச்சொன்னாய்
இந்து மதத்தை மட்டும் உமிழ்ந்து பேசி
கரவொலி வாங்கினாய்!

கண்டதையெல்லாம் பேசித்தீர்த்தாய்
காணாததையும் கண்டேனென்றாய்   
தானொரு பகுத்தறிவாதியென்றாய்
மதமும்,கடவுளும் பொய்யென்று
மேடைகளில் பரப்புரை பலசெய்தாய்!
 
பிரிவினையில்லாத மதமே இங்கில்லை
என்பதை அறிய மறுத்து அறிவிலியாய்...
வேறெந்த மதங்களையும் எதிர்க்க
திராணியில்லாத வாய்ச்சொல் வீரனாய்... 
தான்சார்ந்த இந்து மதத்தை மட்டுமே குறைக்கூறி
கூச்சலிட்டு குதூகலம் அடையும் 
குறுகிய புத்தியையும் வளர்த்துக்கொண்டாய்!

உன்னருகில் கடந்து போகும் தாசியை
பத்தினியென்று கண்மூடி கிடந்தாய்
உன்னை ஈன்றெடுத்தவள் புறக்கணித்ததால்
தன் தாயின் கற்பின் மீதே களங்கம் பேசி
மேடைகளில் தாசியென்று முழங்கினாய்!

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
காக்கைகள் எச்சமிட
தெருவுக்கொரு சிலை வைத்து
அந்த தலைவனையே கடவுளாக்கிய
போலி பகுத்தறிவியாதிகளின்
இதுபோன்ற மூடச் செயல்களைக்கண்டு
புல்லரித்து புளங்காகிதம்
அடைகிறேன்!

பகுத்தறிவாதியென்ற போர்வையில்
உம் அறியாமையை நினைத்து
குழம்பி நிற்கிறேன் நான்... 

இப்போதாவது சொல்
உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?



            - இரா.ச.இமலாதித்தன்

_

அன்பே சிவம்!



தலையில் தேங்காய் உடைப்பதையும்
பச்சிளம் குழந்தையை நெஞ்சினில் மிதிப்பதையும்
பார்த்து பக்தி பரவசமடையும் பாவப்பட்ட மனிதா- நீ
ஆண்டவனை திருப்தி படுத்துகிறேனென்று - போலி
ஆன்மீகத்தில் அடிமைப்பட்டு கிடக்கின்றாய்!
வாயிலிருந்து லிங்கம் எடுத்தவனையெல்லாம்
சிவனோடு ஒப்பிட்டு பழகிவிட்டாய்
மாயம் செய்யும் மந்திரவாதியெல்லாம்
ஞானம் தெளிந்த ஆன்மீகவாதியாய்
வேடம் போடும் நாட்டுக்குள்ளே - அவனை
வீணாய் நம்பி மதிகெட்டு நிற்கின்றாய்!
காவி உடுத்தியவனெல்லாம் உனக்கு
கடவுளாக தெரிந்து தொலைக்கிறானோ
உனக்குள்ளேயே எல்லாமும் இருப்பதை மறந்து
எவனோவொருவனின் காலை வருடுகிறாய்
மூளை உள்ளவன் தானே நீ
மூடநம்பிக்கையில் ஏன் முடங்கிக் கிடக்கிறாய்?
கடவுளென்று ஒன்றே இல்லையென்று
சொல்லி திரியும் கூட்டமும் கூட
இல்லாத இறைவன் இங்கே இருந்தால்
நல்லதென்றே சொல்கிறோமென்று
உரைக்கும் காலமிங்கே கனிந்து கொண்டிருக்க - நீ
கண்கட்டு வித்தைகளுக்கெல்லாம் விலைபோனால்
ஏமாற்றப்படுவதுதான் உனக்கான விதிப்பலன்!
பசியென்று கையேந்திவரும் வயோதிக கிழவனுக்கும்
உன்னைத்தேடிவரும் தகுதியுள்ள ஓர் இளைஞனுக்கும்
உதவி செய்ய மறுக்கும் மனவூனமுள்ள நீ
கோவிலின் உண்டியலில் கோடிக்கணக்கில் பணமும்
எடைக்கு எடை தங்கமும் தந்தென்ன லாபம்?
இறைவனை தேடி அலையும் உன் நெஞ்சுக்குள்
அன்பென்ற ஈரம் வறண்டு போய்விட்டதே - நீ
கோவில் குளங்கள் எங்கெங்கு சுற்றினாலும்
அன்பே சிவனென்று அறியாத வரை
போலி ஆசாமிகளால் முடக்கப்படுவாய்
பலவீனமான பக்தனாய்!

- இரா.ச.இமலாதித்தன்

பெண்ணொருத்தி!

(நான் ஆணாதிக்கவாதியென்ற மனப்பான்மையில் இருந்தாலும் வேலுநாச்சியார் போன்ற வீரமிக்க பெண்களையும் நினைவுபடுத்திக்கொண்டு இந்த மகளிர் தினத்தில் என்னுடைய ஒரு வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்.)

இனிய மகளிர் தின வாழ்த்துகள்!





ஆண்மகனாய் அவதாரமெடுக்க
தன்னுயிரை ஈந்து பிறப்பெடுக்கச் செய்து
எனக்கோர் புத்துயிர் கொடுத்தாள்
தாயாய் ஒருத்தி!
பள்ளிச்சென்ற பால்ய வயதில்
அடித்தும் அரவணைத்தும்
பாடம் புகட்டி வளர்தெடுத்தாள்
ஆசிரியையாய் ஒருத்தி!
கல்லூரி காலங்களில் கதைகள் பல பேசி
வகுப்புக்கு உள்ளும் வெளியும்
நட்போடு உடனிருந்தாள்
தோழியாய் ஒருத்தி!
வெளியூர் வந்து வேலைசெய்து
பிழைப்பை நடத்திய காலங்களிலும்
உடன்பணி புரிந்து என்னை ஆக்கிரமித்தாள்
காதலியாய் ஒருத்தி!
திருமணத்தால் கரம்பிடித்து
என் வாழ்க்கைக்குள் உட்புகுந்து

புதுப்பயணத்தை தொடக்கிவைத்தாள்
மனைவியாய் ஒருத்தி!
தந்தையென பதவிஉயர்வு கொடுத்து
என்னை பெருமித படுத்தி
பேரானந்தத்தையும் கொடுத்தாள்
மகளாய் ஒருத்தி!

- இரா.ச.இமலாதித்தன் 

சமூகவியல்!

 


01.
ஆங்கில பள்ளியை 

தேடி அலைந்தான் 
தன் மகள் தமிழ்செல்வி பாடம் கற்க!


02.

குடியிருக்க வீடில்லை
கூலித்தொழிலாளியாய்
கொத்தனார்!



03.

தீப்பெட்டி தொழிற்சாலையில்
சிறுவன் கண் கசக்க
மத்தாப்பூ சிரிக்கிறது!

04.


செதுக்கியவன் தொழிலாளி
திருடியவன் முதலாளி
சிலையாய் கடவுள்!



 - இரா.ச.இமலாதித்தன்

_