நீ நான் காதல்!




-001-

விடிகாலை பொழுதுகளில்

சாலையோரம் 
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!

-002-

மாலை பொழுதில்

உன்புன்னைகைக் கண்டு 
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!

-003-

சூரிய உதயத்தை

உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!

-004-

நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும் 
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!

-005-

உன்னால் மட்டும்

எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!

-006-

உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!

-007-

நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது

நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!

- இரா.ச.இமலாதித்தன் 



காதல் புதிது!




-001-

காலைப்பொழுது கடந்தபின்னும்
சாலையோர பூக்களெல்லாம்
மலராமலே காத்துகிடக்கிறது
உன் வருகைக்காக!

-002-

உன்னை கண்டபின்தான்
சின்னஞ்சிறு வண்ணப்பூக்களும்
புன்னகையை சிதறவிடுகிறது
என்னைப்போலவே!

-003-

உன்னை காணாத
நாட்களெல்லாம்
என் நாட்காட்டியில்
முடியுறாமலே
முழுமையற்று கிடக்கின்றன
நாட்கள் அனைத்தும்!

-004-


நீ என்னை
கடந்து செல்லும்
நேரமெல்லாம்
என் கடிகார முட்களும்
கண்ணடித்து சிரிக்கின்றன
வந்துவிட்டாள் தேவதையென்று!

-005-

நீ
யாரென்றே தெரியவில்லை
இருந்தாலும்
உன்னை நினைத்தே
காகிதங்களில்
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
கவிதை என்றார்கள்!

-006-

உறங்கா இரவுகளில்

உன்னிடமே
பேசிக்கொண்டு இருக்கிறேன்
படுக்கையறையில்
தன்னந்தனியாய்!


- இரா.ச.இமலாதித்தன்



காதல் முதல்!




-001-


அலைகள் கூட
என்னிடம் கேட்குதடி...
உன்னவள் எங்கென்று ?
எப்படி சொல்ல
நீ இன்னொருவனுக்கு
மனைவியானதை...!   


-002-
 
என்னைபோல் அலைகளும்
உன் பெயரை  உச்சரித்துக்கொண்டே
நீ நின்ற இடத்தைத் 

தொட்டுவிட்டு செல்கிறதே
ஏன்?
என்னிடம் சொன்னதுபோல்
அலைகளிடமும் சொல்லிவிட்டாயா
காதலிக்கிறேனென்று! 


-003-
 
அன்பே நீயும்
பங்குசந்தை போலத்தான்
நேற்று
சந்தோசப்பட வைத்தாய்
இன்று
சங்கடப்பட வைக்கிறாய்!


-004-

நாம் இருவரும்
கைகோர்க்காமல்
கடற்கரையில்
கடந்துசெல்லும்
தருணங்களில்
அலைகள் கூட
உள்வாங்கி கொள்கிறது!


- இரா.ச.இமலாதித்தன்