சமூகவியல்!

 


01.
ஆங்கில பள்ளியை 

தேடி அலைந்தான் 
தன் மகள் தமிழ்செல்வி பாடம் கற்க!


02.

குடியிருக்க வீடில்லை
கூலித்தொழிலாளியாய்
கொத்தனார்!



03.

தீப்பெட்டி தொழிற்சாலையில்
சிறுவன் கண் கசக்க
மத்தாப்பூ சிரிக்கிறது!

04.


செதுக்கியவன் தொழிலாளி
திருடியவன் முதலாளி
சிலையாய் கடவுள்!



 - இரா.ச.இமலாதித்தன்

_

காதலால்!


 

01.

உன் இமைகளின் 
கதவை திற
எனக்கான 

காதல் குடியேறலாம்!


02.

கொடுத்தும் வாங்கியும்
கடன்பட்டே நிற்கிறேன்
உன்னிடம் என் காதல்!

03.


கானல் நீராகியது

பிரிவின் கண்ணீர்
 

காட்சிப்பிழையாய்
உன் வருகை! 


04.


உன் இருவிழி பார்க்கும் போது
முற்றிலும் துறக்க முடிவு செய்த
இந்த முனிவனின் தவம்
கனவாகி போனது!
05.

ஆயிரக்கணக்கான ஆசைகளை
உனக்காக சேமிக்கிறேன்
ஒவ்வொரு கவிதைகளிலும்!

06.


நாட்காட்டியில் ஒவ்வொரு தேதி 

கிழிக்கும்போதும்  
உன்னை சந்தித்த நாளே 

வந்து மறைகிறது
உன்காதலைப் போலவே!

07.

என் முகம் பார்க்கையில்
உன் முத்தத்தின் சுவடுகளை
ஞாபப்படுதுகிறது கண்ணாடி!


-இரா.
ச.இமலாதித்தன்

ஆன்மிகத்தொழில்!






தனக்கென புதுப்பெயரை தன்வசப்படுத்தி
பெயரின் முன்னும் பின்னும்
படித்து வாங்கிய பட்டம்போல - தனக்குதானே
அடைமொழியிட்டு அரசியல்வாதியாய்
ஆகிபோனான் ஆன்மிகவாதியென்று!
முகம் சிரம் முழுதும் முடியை வளர்த்து
தன்னைத்தானே முனிவனென்று
திரிந்திடும் கும்பல் அதிகமாகி போனப்பின்னே
ஆச்சாரமாய் ஆசிரமம் தொடங்கி
விபச்சாரம் நடத்தினான் விபூதி திலகமிட்டு!
சொற்பொழிவை உலகெங்கும் நடத்தி
செல்வ செழிப்பாய் வாழ்க்கை நகர்த்தி
காவி உடையை களங்கப்படுத்தும்
காம இச்சை தீராதவனெல்லாம்
தீர்க்கத்தர்சியனான் பக்தனால்!


தானே இறைவனென்று சுயபுகழ் தேடி
அருளைக்கொடுத்து பிரம்மனானவன்
பின்னொருநாள் சங்கடப்படப்போவது தெரியாமலேயே
படுக்கையை பகிர்ந்தான் நடிகைகளோடு
பிரம்மச்சாரியென்ற பகல்வேசமிட்டு!
கடவுள் பெயரால் செல்வம் சேர்க்கும்
கயவர்க்கூட்டம் நிரம்பிவழியும் நெரிசலிடையே
கண்டவனெல்லாம் கடவுளைக் கண்டேனென்று
தம்பட்டம் அடித்து பணம்கொழிக்கின்ற
வியாபார மையமானது ஆன்மிகத்தொழில்!

- இரா.ச.இமலாதித்தன்


காக்கைச் சிரிப்பினிலே!






பள்ளம் படுகுழி யெங்கும்
கருஞ்சிறுகற்களால் தாரூற்றி பூசப்பட்டு
சாலையெங்கும் பளபளப்பாய்
படர்ந்து கிடக்கிறது!
நகரமெங்கிலும் சாலையோரம்
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்
பதற்றத்தோடு பரிதவித்து
காவல்துறை காத்துக்கொண்டிருக்கிறது!


முக்கியச்சாலையின் முச்சந்தியில்
முகமுடல் முழுவதுமாய்
மூடி மறைக்கப்பட்டுள்ள
கருவுருவ சிலையின் மீது
அமரமுயலும் காக்கையொன்று
கல்லெறிந்து விரட்டப்படுகிறது!


அரைமணி நேரம் கடந்தபின்னே
ஆர்பரிப்பும் அமைதியாய் ஓய்ந்து
தலைவரின் புடைசூழ வந்த கூட்டமெல்லாம்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
காணமல் போயிருந்தது!
மீண்டுமந்த காக்கை காற்றிலேறி
அச்சிலையின் மேலமர்ந்து
தலைவர் சென்ற வழியை நோக்கி
ஏளனமாய் சிரித்துக்கொண்டே
திறப்புவிழா கண்ட சிலையின் தலைமீது
எச்சத்தை விட்டபின்னே
சுதந்திரமாய் பறந்து போனது!


 - இரா.ச.இமலாதித்தன் 




_

சதுரங்கம்!



எட்டு எட்டாய் தொட்டு நிற்கும்
ஒவ்வொரு கட்டமெங்கும்
மீண்டுமொரு பொற்காலம்
அழிவுறும் காலமன்றோ...
போர்க்களம் தினம் சென்றும்
பக்கத்தில் பரி இரண்டு இருந்தும்
பறிதவிக்க விட்டதென்ன...
கடை இருபுறம் கரியிரண்டு இருந்தும்
கண்கலங்க வைத்ததென்ன...
நாலிரு படையினர் இருந்தென்ன
ராணியின்றி தோற்று நிற்கிறேன்
கூனிக்குறுகி தனித்து நிற்கிறேன்
இத்தனை நடந்த பின்னும்
நானின்று வெட்டப்படுகிறேன்
யாருமில்லா ராஜ்யத்தின்
அரசனென்ற அவப்பெயரால்!

 - இரா.ச.இமலாதித்தன் 

திணைக்காதல்!





நாற்றுநட்ட கழனியெங்கும்
வரப்புப்பாதை வழியுனூடே
வரையறையின்றி வகைவகையாய்
பலகதைகள் பேசி...
பள்ளிச்சென்ற பல நாட்களில்
படிக்காமல் ஊர்சுற்றி
கைகோர்த்து திரிந்தோமே
அப்போதே பசுமையாய் நம்மிடையே
விளைந்தது மருதக் காதலோ...?

கடல் அலையாய் பொங்கி விழும்
ஆற்றுப்படுகை அடிவாரத்தில்
மீன்பிடித்த மகிழ்ந்த போதும்...
காகிதம் கிழித்து கப்பல் விட்டு
சேறுபடிந்த சிற்றுடையோடு
நாமிருவரும் நீச்சல் பழகி
நித்தம் மூழ்கிக்கிடந்த
அந்நாட்களிலேயே நம்மை
நனைத்தது நெய்தல் காதலோ...?

மழைக்கால நேரங்களில்
மலைக்கோயில் பாறையில்
மாலைப்பொழுதெல்லாம்
நாமிருவரும் சறுக்கி விளையாடி
இறுதியில் கோவில் நடைசாத்தும்
மணியோசையில் ஓடோடி
கீழே சிதறிக்கிடக்கும்
குங்கும திருநீரெடுத்து
உன் நெற்றியில் என்னை
திலகமிடச் சொன்னாயே
அப்போதே நம்முள்
படிமமானது குறிஞ்சிக் காதலோ...?

விடுமுறை நாட்களில்
ஊருக்கு வெளியே
ஒதுங்கி நிற்கும் காட்டுக்குள்
விறகு சேகரிக்க பத்து பேராக
பட்டாளமாய் சென்றாலும்...
எனக்கு மட்டும் சிறுகாயங்கள்
ஏற்படும் தருணங்களிளெல்லாம்
உன் கண்கள் கலங்கியதும்...
என்னை முறைத்த
உன் அண்ணனுக்கு புரிந்த
எனக்கு புரியாமல் போனபோதே
வளர்ந்தது முல்லைக் காதலோ...?

காடும் மலையும் சுற்றித் திரிந்தும்
காற்று மழையிலும் கூடி இருந்தும்
உன்னை முழுவதுமாய் அறியத்தெரியாத
காதல் மழையில் நனையத்தவறிய
அறிவிலியாய் அலைந்ததையும்
உணர்கிறேன் நானின்று ...
இதுபோல் வெறுமையில் வெந்து தணியும்
குழப்பநிலைதான் பாலைக் காதலோ...?

புரிதலும் புரிதல் நிமித்தமாய்
பெயரில்லா ஆறாம் திணையால்
நாமிருவரும் அன்பால் இணைந்து
திணைக்காதலுக்கு தீர்வு காண
இன்னும் எத்தனை நாட்கள்
நான் காத்திருக்க வேண்டுமோ...?

- இரா.ச.இமலாதித்தன்

இனிய இரவு!




திறந்த வானமாய்
மூடிய போர்வைக்குள்ளே
பொத்தல் விழுந்த
சின்னஞ்சிறு ஒளிகீற்றுகளாய்
நட்சத்திர கூட்டங்களும்...
பெரு வட்டமிட்ட ஒளிப்பந்தாய்
நான் போகிற போக்கெல்லாம்
என் பின்னாலே சுற்றி திரிந்த
ஒற்றை நிலவையும்...
ஓரிரு நட்சத்திரங்கள் நகர்வது
ஏனென்று புரியாமல்
அசைவுகளால் ஆராய்ச்சி செய்து
விமானமென்று கண்டறிந்ததையும்...
மல்லார்ந்து படுத்துறங்க
கண்ணசரும் நேரம்வரை
மின்மினி பூச்சிகளையும்
ரசித்து கிடந்த
முன்னிரவு நேரங்களையும்...

இன்று
குளிரூட்டப்பட்ட அறையின்
மெத்தைமடியில் படுத்திருந்தும்
உறக்கம் கெட்டுக் கிடக்கின்ற
நடுநிசி இரவுக்குள்ளே
பின்னோக்கி மீண்டெழ செய்கிறது
கட்டாந்தரையில் பாய்விரித்து
வெட்டவெளியில் படுத்துறங்கிய
இனிய இரவுகளை!

- இரா.ச.இமலாதித்தன்

தணியாத நிகழ்வுகள்!



  
தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

வேலையில்லா காலங்கள்!





குடும்பச்சுமை ஏதுமில்லா
குதூகல கும்மிகளுக்கு நடுவே
வீட்டிற்க்குள் குறுக்கே வந்த
கடன்சுமையை சுமக்க முடியாமல்
தவித்திருந்த என் தந்தையின் தோளுக்கு
துணை சேர்க்கும் கிளையாய்
என் மனதில் ஆழமாய்
ஆலம்விழுதுகள் துளிர்விட ஆரம்பித்தது
வேலைக்கு சென்றிடவேண்டுமென்று!
 
ஊருவிட்டு ஊருவந்து
ஞாயிறு தினசரிகளை பக்கம்பக்கமாய்
கட்டம்கட்டிய விளம்பரங்களை
வேலைத்தேடி தவித்தபோது...
வேலையேதுமில்லாமல்
விளையாட்டாய் சுற்றி திரிந்து
வீணாக பலபொழுதை கழித்து
வீராப்பாய் சட்டை தூக்கி
வீதியெங்கும் அலைந்த
அந்நாட்களில் நான் அறிவேனா
ஒவ்வொரு அலுவலகமாய் படியேறி
இப்படி அலைகழிக்க படுவேனென!
 
எப்படியோ ஒருவழியாய்
போதுமென்ற மனநிறைவோடு
இன்றைய வாழ்க்கை தந்த
இந்தவேலையும் முட்டிமோதி
கிடைத்த போது...
பார்ப்பவன் யாராகினும்
படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சே
வேலைக்கு போகலையா? யென்று
நையாண்டி செய்தாலும்
நாசுக்காய் சிரித்து மழுப்பி
நழுவிச்சென்ற அந்நாட்களில்
நான் அறிவேனா
இவ்வாழ்க்கையும் என்னைவிட்டு
விலகிச்சென்றதை!


- இரா.ச.இமலாதித்தன் 


_