
சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!
சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!
சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!
- இரா.ச.இமலாதித்தன்

பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!
எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம் தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு!
சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு!
எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இரு பாதங்கள் படிய
நான் கடந்து போகின்ற
சாலைகளின் பாதையெங்கும்
என் கண்ணெதிரே
தென்பட்ட உருவமெல்லாம்
பிரதிபலிக்கிறது உன் முகத்தை!
இதுநாள் வரை உன்னைநான்
பார்க்கவே இல்லையே...
இருந்தபோதிலும்
காண்கின்ற எல்லாமும்
கவித்துவமாய் என் கண்களுக்கு
காட்சி தருகின்றனவே
கவிதைதான் உன்முகமோ?
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் நிலவைப்போல்
என்னுலகில் தோன்றவேண்டிய
எனக்கான வளர்பிறையே
எப்போது முகம் மலர்வாய்?
உன் நிழலைக் கூட காணமுடியாமல்
உன் முகத்தை அனுதினமும்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு பிடித்த ஒன்றைப்போல்
உனக்கானதொரு
புத்தம்புது உருவத்திற்குள்
என்னுயிரை பகிர்ந்தளித்து!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

_____________________
001.
உன்னிடம் சொல்ல நினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ குனிந்து நடக்கும் பாதையில்
கீழே சிதறி கிடக்கலாம்;
மெதுவாக கடந்து செல்!
_____________________
002.
ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்!
_____________________
003.
ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்!
_____________________
004.
புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது!
- இரா.ச.இமலாதித்தன்
ஏதோதோ உருவகப்படுத்தி
எழுதினால்தான்
காதலியைப் பற்றிய
கவிதை வருமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்...
உவமைக்காக ஒவ்வொன்றாய்
இவ்வுலகில் தேடியலைந்து
உனக்கான மாற்றுரு
ஒன்றுமில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்
வார்த்தைகள் ஊமையாகி
சொற்களெல்லாம் உதிரத்தை உதிர்த்து
வெற்று வரிகளாய் மட்டுமே
காகிதத்தில் வந்து விழுகின்றன;
உயிர்களெல்லாம்
பிரம்மனின் படைப்பென்று
எல்லோரும் சொல்லிக்கேட்டிருந்தும்
கண்கள் கதை பேசுவதும்
இதழ்கள் எட்டிப் பார்ப்பதும்
உன்னுள் மட்டுமெப்படி
இந்தவொரு முரண்பாடென்று
உன்மீதான சில சந்தேகங்கள்
என்னுள் அடிக்கடி எத்தனிக்கிறது;
தேவதையை
கதைகளிலே கேட்டதுண்டு
என் கண்ணெதிரே நீ வந்தபின்தான்
நேரடியாய் கண்டுகொண்டேன்...
எனக்கான தேவதையே
உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும்
கணவனாய் நான் மாற
சம்மதம் சொல்வாயோ இல்லை
சங்கடத்தில் கொல்வாயோ?
- இரா.ச.இமலாதித்தன்
ஏழெட்டு பிள்ளைகளை
ஈன்றெடுத்த தாடிக்காரனொருவன்
தன் நாலுவயது மகனுக்கு
கைத்தொழிலாய் மாறிப்போன
சுயவேலை யொன்றை
சிலகாலம் பயிற்றுவித்து...
கலைந்து கிடக்கும் முடியோடும்
கறை படிந்த உடையோடும்
முதல்நாள் தொழிலுக்கு
தன்மகனை அழைத்துவந்து
பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்து
போய்வருகிற எல்லோரையும்
சட்டையைப் பிடித்திழுத்து
கைநீட்டி கேட்கச்சொல்கிறான்
பிச்சை...!
- இரா.ச.இமலாதித்தன்
" கைத்தொழில் "யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழ் ஆதொர்ஸ் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.
"கைத்தொழில்" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.

001.
முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை!
002.
ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று தமிழர்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்!
003.
ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்
ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்!
004.
உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!
- இரா.ச.இமலாதித்தன்
"மாவீரா" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாட்களும்
உன் அழைப்பு வந்தபிறகு தான்
சுழியத்திலிருந்து தொடங்கி
சுழலத் துவங்குகிறது
இருபத்திநாலு மணி நேரத்தின்
எனக்கான கடிகார முட்கள்!
உரையாடலில் கேள்விகள் கேட்பதென்பது
எளிதான போதும்
உன்னிடம் பேசும்போது
வினாக்கள் கூட வெளிவர மறுத்து
உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துகின்றன;
நீ கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் விடையில்லை என்பதை
முன்னரே நீ மட்டும் எவ்வாறு அறிந்துவிடுகிறாய்?
அதுதெரியாமலேயே
எங்கேயோ தலைமறைவாய்
ஓடிஒளிந்து கொண்ட உனக்கான பதில்களை
என்னிடம் தேடியலைந்து
விடைகிடைக்காமல் போனதும்
உரசிக் கொள்ளாமல் உறங்கிக் கிடக்கின்றன
என்னிரு உதடுகள்!
பின்பு உளறத்தொடங்கிய உதடுகள்
ஊமையானதை சற்றே உணர்ந்துகொண்டு
இரு உதடுகளும் விழித்து
இதழ்களாய் விரிக்கும்போது
வார்த்தைகள் நொண்டியடித்து
அங்கே ஊனமாய் நிற்கிறது
நம் உரையாடல்!
முடிவிலியாய் நீ
என்னோடு இருப்பாயென்ற
மாயையை உணரமறந்து
அப்புறம்,வேறென்ன, ம்ம்,சொல்லு,சரியாவென்ற
ஐந்து வார்த்தைகளால் நீ உரையாடும்
அந்தவொருசில நாழிகைக்குள்
உன்னுள் உறைந்து போய்விடுகிறேன்
அறிவிலியாய்!
உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

காதலால் நான் உன்னை
மணம் செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மனதை மறுத்து
உன்னை மட்டுமே நினைத்து
உயிர் துடிக்க முயலுகின்ற
ஒவ்வொரு நொடிகளுக்குள்ளும்
பலகோடி விதைகளாய்
ஆழ்மனதில் விழுங்கப்படுகிறது
நம்மிருவரின் அன்பு!
விலகிச்சென்ற அன்பால்
சிதைவடைந்த செந்தளிர் நாட்களும்
விளைச்சலாய் வெளிப்பட்டு
விருட்சமாய் வெளிக்கொணரும் காலங்களில்...
தனிமையால் வெறுமை சூழ்ந்து
செழிப்பிழந்து செயல்படாமல்
தடுமாறி கிடக்கும்போது
என்குழந்தையின் பெயராய் நீயும்
உன்குழந்தையின் பெயராய் நானும்
அறுவடைசெய்திருப்போம்
விழுங்கப்பட்ட அன்பை!
- இரா.ச.இமலாதித்தன்